Tuesday, June 9, 2009
கோவி.கண்ணனும், நையாண்டியும் - சிக்கலின் நான்
படிக்கிறவங்க கண்ணுல இரத்தக்கண்ணீர் வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் கோவி.கண்ணன் மற்றும் நையாண்டி நைனா என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை!
முன்னணி கலைஞரான கலைஞர் மு.கருணாநிதி போன்றவர்கள் திரு மோகன் கந்தசாமி போன்றவர்களுக்கு செவ்வி வழங்கியிருக்கும் போது என்னுடைய செவ்வி பின்னணி செவ்வியாக மட்டுமே பார்க்கப் படும் என்பது திண்ணம்.
1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
இந்தக் கேள்வியெல்லாம் சாதனை பண்ணுனவங்க கிட்ட கேக்கணும். சோதனை பண்ணுறவங்களுக்கிட்ட கேட்கக்கூடாது.
என் தந்தை எனக்கு சோதிபாரதி என்று பெயரிட்டார்(அவருடைய தமிழ் பற்று). குழந்தையாக இருக்கும் போது என் தாய் சுப்பிரமணிய பாரதி என்றழைத்து மகிழ்ந்தார். பிற்காலத்தில் நான் ஜோதிபாரதி என்று மாற்றிக் கொண்டேன். உச்சரிப்புப் பிழை பொருட்பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நல்ல நோக்கத்தில்...! மற்றபடி யாரையும் சோதிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குக் கிடையாது.
2.கடைசியாக அழுதது எப்போது..?
இப்போதெல்லாம் மரத்துப் போன இதயங்களை உடையவர்களைக் கண்டு என் கண்கள் கூட அழ மறுத்துவிடுகின்றன, மனம் மட்டும் அழுகையை நிறுத்தாத போது...!
3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
கையெழுத்து அழகாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள். எழுதும் போது ரசித்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.(கையெழுத்து நல்லா இருந்தா தலைஎழுத்து நல்லா இருக்காது போன்ற உரையாடல்களை நம்புவதில்லை)
4.பிடித்த மதிய உணவு..
எல்லா சைவ உணவுகளையும் விரும்பி சாப்பிடுவேன். பரங்கிக்காய் மட்டும் பிடிக்காது.அசைவ உணவுகளில், நண்டு வறுவல் பிடிக்கும், இறால், விரா மீன், வாளை மீன் பிடிக்கும். மட்டன் பிடிக்கும், நம் தமிழகத்தில் மட்டும் தான். சிங்கையில்ஆட்டுக்கறி( மட்டன்) சாப்பிட அவ்வளவாக பிடிப்பதில்லை. சிங்கையில் ஒரு குறிப்பிட்ட உணவகங்களில் ஆட்டுக்கறி நன்றாக இருக்கும்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்கிற படியால், சீன உணவில் லக்சா, பிஷ் சூப், பிஷ் பால் நூடுல்ஸ் இன்னபிற உணவு வகைகள் பிடித்தமானது.
5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
என்னைப் பார்த்தவுடன் பழக வேண்டும் போல் இருக்கிறது என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் தான் நானும்...! வாங்க பழகலாம் என்னும் பிளாஸ்டிக் பழக்கம் எனக்கு ஒத்து வராது.
6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடலும் அருவியும் எங்க வீட்டுக்கு பக்கத்துல இல்லை. எனக்குப் பிடித்தாலும் அதனால் எனக்கு பெரிய பலன் ஒன்றும் இல்லை. சுற்றுலா சென்றால் அருவியில் குளிக்கத்தான் பிடிக்கும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..
முகத்தை, கண்ணைப் பார்த்து பேசுவதே முறையாகும். அதுதான் எனக்கும் பிடிக்கும். மண்ணைப் பார்த்து பேசும் பெண்ணானாலும் கண்ணைப் பார்க்கவே விரும்புவேன்.
8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது: ஓரளவுக்கு உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பது, முடிந்தவரை அதைக் காப்பாற்றி வருவது.
எழும்பூரில் காத்திருப்பவரிடம், நான் இந்தா வந்துடுவேன் சைதாபேட்டை வந்துட்டேன் என்று தாம்பரத்தில் இருந்து கொண்டு சொல்வது எனக்குப் பிடிக்காது.
பிடிக்காதது: ஒன்பது வேலைகளை ஆற போட்டுவிட்டு பத்தாவது வேலை வந்தவுடன் அதனையும் சேர்த்து சோறு, தூக்கம் எதுவும் பாராது ஒரே மூச்சில் முடிக்க நினைப்பது.
9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
பிடித்த விசயம் : நாம் மறந்த பலவற்றை ஞாபகம் வைத்திருப்பது. நோட்டு புத்தகம் வாங்குற செலவு மிச்சம்.
பிடிக்காத விசயம் : நாம் தெரிவிக்கும் கருத்துகளை பெரும்பாலும் ஆமோதிப்பது.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
ஒரு சில மனிதர்களுடன் வாழும் வாய்ப்பு கிட்டியிருப்பதால் அந்த வருத்தம் இதுவரை ஏற்படவில்லை. இருப்பினும் நம் உறவுகள் அனைவரையும் விட்டுவிட்டு சிங்கை போன்ற இயந்திர உலகில் வாழ்வதற்கு யாருக்குத் தான் பிடிக்கும்.
11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
இந்த கேள்வியை கேட்டவர் என்னை காதலிக்க விரும்புகிறாரா? நான் திராவிட பாரம்பர்யத்தில் வந்த மஞ்சள் சட்டையும் போடவில்லை, அண்ணாயிசத்தை குழைத்த பச்சை கலர் சிங்குஜாவும் இல்லை. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..
பாட்டா? என் பாட்டையே நீங்க கேட்பீங்களா என்று தெரியவில்லை. இதுல நான் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் வேறா?
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
தொடர்ந்து தட்டச்சு மட்டும் செய்வதால், பேனாவாக ஆனால் எனக்கு இரண்டு வேலைதான். இருப்பினும் பேனாக்களிடம் ஏன் நிற வெறி காட்ட வேண்டும் என்பது எனது கேள்வி. தொடர்ந்து நிறம் சம்பந்தப் பட்ட கேள்விகளையே கேட்டுக் கொண்டு வருவதால், கேள்விகளைக் கேட்டவர் நிற வெறியுடையவரோ என சந்தேகிக்கிறேன்.
14.பிடித்த மணம்..
தமிழ் வாசம் வீசும் மணம் மட்டுமல்ல மானமும், மனமும் கூட பிடிக்கும்.
15.நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..
"டொன் லீ" சிவா தயாளன் - எமது ஈழத்து உறவு, நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்.
"நிஜமா நல்லவன்" பாரதி - கவிதைகள் எழுதுவார், பின்னூட்டங்களின் பின்னிப் பெடலெடுப்பவர், வாசிப்பு தேடல் உடையவர்.
"பித்தன்" விஜய் - மேன்மையான சீரிய கருத்துகளை கூரிய சொற்களால் கட்டமைப்பார். வாசிப்பை நேசிப்பாய் கொண்டவர்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..
இதை அனுப்பிய திரு கோவியார் எண்ணற்ற பதிவுகள் எழுதியுள்ளதால் எதை விடுப்பது எதைத் தொடுப்பது என்று தெரியவில்லை. கோவி கண்ணன் அவர்களின் பெரும்பாலான பதிவுகள் பிடித்தவையே!
இன்னொரு பதிவரான திரு நையாண்டி நைனா அவர்களின் பதிவுகளும் பெயருக்கேற்றாற்போல் நகைச்சுவை ததும்ப இருக்கிறது. பெரும்பாலான இவரது பதிவுகளும் எனக்கு பிடித்தவையே!
17.பிடித்த விளையாட்டு...
கிரிக்கெட் என்னும் பணக்கார விளையாட்டு அல்ல.
18) கண்ணாடி அணிபவரா?
ஏன் வயது 40 ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்களா? இல்லை.
19).எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...
இயல்பான, நகைச்சுவைகளை உள்ளடக்கிய படமும் பிடிக்கும். பிரமாண்டமும் பிடிக்கும். ஏன் உங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையா? அதற்கான கருத்துக் கணிப்பு போல் தெரிகிறதே, அதான் கேட்டேன்.
20.கடைசியாக பார்த்த படம்..
இப்போது ஏதும் பார்க்க வில்லை. சென்ற ஆண்டு பார்த்தது சேரனின் மாயக்கண்ணாடி. நீங்க படம் எடுக்கனும்னு நினைத்தால் சேரனை வைத்து எடுங்கள் அல்லது சீமானை வைத்து எடுங்கள்.
21.பிடித்த பருவ காலம்...
தை - அதுதான் தமிழனின் திருநாள் தொடங்கும் மாதம், அறுவடை செய்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் காலம்..
22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? - க.ப.அறவாணன் எழுதியது பலருக்கு பயன் படாத புத்தகம், எனக்காவது பயன்படுகிறதா என்று பார்ப்போம் என்ற ஒரே நம்பிக்கையோடு படிக்கிறேன்.
23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
கணக்கு பண்ணி மாற்றுகிற நிரந்தர வேலையெல்லாம் கிடையாது. பெரும்பாலும் குழந்தைகளின் படங்களை போடுவது உண்டு. தற்போது போட்டிருப்பது என் மகன் நரேன் அவர்கள் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பாரதியார் வேடமிட்ட படம்.
24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...
பிடித்த சத்தம் : அழகின் சிரிப்பு
பிடிக்காதது: அவசர வேலையாக இருக்கும் போது தெரிந்தே நம்மை அழைக்கும் சத்தம்.
25.வீட்டை விட்டு சென்ற அதிகபட்ச தொலைவு ?
சிங்கப்பூர் - மலேசியா
26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
தனித் திறமைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இனிமேல் இருப்பதாக யாரவது சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
27.உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
ஓரிடத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டால் அது இயற்கை என்று கூறிவிட்டு, இன்னொரு இடத்தில் வெறும் தாக்குதலுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் தன்மையும் போக்கும்.
28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..
சாத்தான் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாததால், நம்பிக்கை உள்ளவர்களிடம் இந்த கேள்வியை கேட்டிருந்தால் நலம்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..
நான் போன இடங்களில் குற்றாலம் பிடித்தது.
30.எப்படி இருக்கணும்னு ஆசை..
எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லாத நிலை வேண்டும் என்று நினைக்கிறேன். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
சமைப்பது - அது இல்லை என்றால் வேலைக்கு ஆகாது.
அவர்கள் இருக்கும் போது சமைக்க விரும்பினால் அவர்கள் சமைக்க விடுவதில்லை. நாம் சமைப்பது பிடிக்கவில்லை என்று சொல்வதுமில்லை. நன்றாக இருக்கிறது என்று மட்டும் கிளி பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
காஞ்சி காம கோடி பீடாதிபதி போன்ற ஆட்கள் சொன்னா நம்புவீங்க. நான் சொன்னா நம்புவியளா? இருந்தாலும் சொல்றேன்,
கட்டுமரம்! வாழ்க்கை என்பது ஓடம் என்று சொல்வார்கள். நம்பாதீர்கள்.
Friday, January 30, 2009
கவிஞர் மலர்விழியின் கருவறைப் பூக்கள் - கவிதைத் தொகுப்பு வெளியீடு
"உத்தியோகம் புருஷலட்சணம்"(இல்லத்தரசனுக்கு வேலை அழகு) எனும் ஆணாதிக்கச் சொற்றொடர் புலம் பெயர்ந்த வாழ்க்கையில் பொய்யாகிக் கொண்டிருக்கும் காலத்தில்,
அந்த வகையில் சிங்கப்பூர் கவிஞர் திருமதி மலர்விழி இளங்கோவன் அவர்களது "கருவறைப் பூக்கள்" முதல் கவிதைத் தொகுப்பு வெளியீடு ஒரு முத்தாய்ப்பு.
இலக்கியத்தென்றல் கவிஞர் ந.வீ.விசயபாரதி அவர்கள் தென்றலாகத் தமிழ் மணம் வீசிக் கமழச் செய்தார். நூலாய்வு செய்ததைப் போல் ஓர் உணர்வு ஏற்பட்டது.
புலம்பெயர் மக்கள் எந்த ரகம் என்பதை சுட்டாமல் சுட்டி இருக்கிறார் என்பதைவிட குட்டி இருக்கிறார் கவிஞர் என்றுதான் சொல்லவேண்டும். இன்னொரு கவிதை "ஆண்களின் ஆதங்கம்" என்ற தலைப்பில், இதில் ஆணாதிக்கம், பெண்ணியம் இரண்டையும் தராசிலிட்டு நிறுத்து கொடுத்திருக்கிறார். இதற்குமேல் விளக்கினால் அது விமர்சனமாகத் தெரியும். அதனால் இத்துடன் விட்டுவிட்டு நிகழ்ச்சிக்குச் செல்லலாம்.
இந்தக் கவிஞர் தனது கருவறைப் பூக்களைப் பிரசவிக்க ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தாலும் தனது மூன்றாவது குழந்தையான கருவறைப் பூக்களுக்கு விழா எடுத்துப் பிரசவம். மருத்துவர் திருமதி உமா இராஜன்(நமது ஈழத்துச் சொந்தம்) அவர்கள் நூலை வெளியிட வேதனையில்லாமல் வெளிக்கிட்டது கருவறைப் பூக்கள், பிறந்த குழந்தையின் மழலைச் சத்தம் விண்ணைப் பிளந்து அனைவரையும் ஒரு நிமிடம் குழந்தைகளாக்கிப் பார்த்தது.
அடுத்து, நூலை வெளியிட்ட மருத்துவர் திருமதி உமா இராஜன், தமது உரையில் கவிஞரிடம் உரையாடியதிலிருந்து கற்பனை செய்து வைத்திருந்த கவிஞரை நேரில் பார்க்கும் போது கற்பனை மெய்யானதை புனைவில்லாத புதுக் கவிதையாகச் சொன்னது நன்றாக இருந்தது. பழக்க தோசத்தில் ஆங்கில வார்த்தைகள் வந்து விடுமோ என்று அச்சப் பட்டது, அதை வெளிப்படையாகச் சொல்லி வெட்கப்பட்டது, என்று சுவையாகச் சென்றது. அவர் தெரிவித்த வாழ்த்துகள் உள்ளக்கிடங்கையில் இருந்து வெளிப்பட்டு ஒப்பனையின்றி மிளிர்ந்தது.
கவிதை என்பது பூக்களாக மட்டுமல்ல,
வாட்களாகவும்; தழுவும் தென்றலாக
மட்டுமல்ல, கிளர்ந்தெழும் புயலாகவும்
இருந்திட வேண்டும் என்பதை உணர்ந்தே
ஒவ்வொரு கவிதைகளையும்
வடித்திருக்கிறார் கவிஞர்.
கவிஞர் மலர்விழி இளங்கோவனின்
"கருவறைப் பூக்கள் காகிதப் பூக்களல்ல,
காவியப் பூக்கள்."
என்று முடித்திருக்கிறார்.
பின்பு நூல் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு தொடந்து நடந்து கொண்டிருந்தது.
Monday, January 12, 2009
அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்!
போகியில் தீயன போகி
யோகமும் போகமும் பொங்க
இல்லம் புதுப்பிப்பு
இரவல் பொருள் திருப்பி ஒப்படைப்பு
வசதிக்காரர் வீட்டில்
வண்ண வண்ண சாயங்களும்
வகை வகையான பொருட்களும்
நடுத்தர குடும்பம்
நமக்கு வெள்ளை மட்டும் தான்
நகை போதும் புன்னகை
ஏழை மக்கள்
ஏங்கி மொழுகினார் சாணத்தால்
ஏற்றம் வரும் என நம்பி
மதுக்கூர் சந்தையிலே
மஞ்சள் கொத்து,
வாழைத்தார்கள்
வகைவகையாய்
செங்கரும்பு வாங்கி
செழிக்க வைப்போம் -நம்
செவ்வேர் விவசாயியை
வறுத்தெடுக்க வாளை மீனும்
வகை வகையாய் காய்கறியும்
வண்ண வண்ண கொம்புச்சாயம்
வசீகரிக்கும் நெத்திசுட்டி
சின்ன சின்ன இதழ் தொடுத்த
சிங்கார மாட்டு மாலை
தேடித் தேடி வாங்கி வந்து
தேக்கி வைத்த நன்றிதனை
தெவிட்டத் தெவிட்ட தந்திடுவோம்
அதிகாலை பொங்கலன்று விழித்து
வீட்டை சுத்தம் செய்து கழுவி
விதவிதமாய் கோலங்களால் தழுவி
மங்கையர்கள் மகிழ்ந்து மகிழ்ந்து உலவி
மற்றவர்கள் இல்லங்களில் போய்
மகிழ்ந்து மகிழ்ந்து
கோலங்களைப் பார்ப்பர்
கூடிப் பேசி குதூகளிப்பர்.
சரியான நேரத்தில்
சரமாக கோடு திறந்து
தளமேடை அமைத்து
சாணத்திலே அருகம்புல் பிள்ளையார்
கிழக்குப்பக்கம் பார்க்கவைத்து
வாழைப்பழ சீப்பும், செங்கரும்பும், மஞ்சள் கொத்தும்
வழமை போல் சர்க்கரைப்பொங்கல் வெற்றுப்பொங்கல்
பொங்கி வரும் நேரந்தனில்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலே பொலிக!!
பொங்கலே பொலிக!! -என்று
கூவிக் கூவிக் குதூகளிப்போம்
பொங்கிய பொங்கலுக்கு
மஞ்சள் கொத்தால்
மாலையிட்டு
ஞாயிறு தொழுது குடும்பத்தோடு
நன்றிக்கடன் தீர்த்துவைப்போம்.
ஆண்டிற்கு ஒருமுறை
அறுதியிட்டு கூறாவிட்டால்
அதனையும் மறந்து விடுவோமோ?
மறுநாள் மாட்டுப்பொங்கல்
மகிழ்வுடனே எதிர்பார்த்து
வருடமெலாம் திங்கும் வைக்கோலுக்கு
வசதியாய் விடைகொடுக்க
வந்தது பொங்கலென்று
வாரி வாரி அறுத்திடுவோம்
வயல்களிலே வளர்ந்த புல்லை
காலையிலிருந்து கால்நடைகளிடம்
கனிவுடனே நடந்துகொள்வோம்
களத்துமேட்டிலே நற்ப் புல்
கண்ட இடம் மேய்த்து
கானோடை ஓடை செவந்தான்,
சாமந்தி பிச்சினி ஒடப்பா
திரிகுளம் வீரையன்குளம் வண்ணார்குளம்
தண்ணீர் காட்டி குளிப்பாட்டி
வீட்டுக்கு ஓட்டிவரும் முன்னே
செங்கல் மாவில் கோலமிட்டு
மங்கையர்கள்
மகிழ்வுடனே காத்திருப்பார் வரவேற்க
குங்குமமும் இட்டிடுவார்
கோலமிடும் பொற்ச்செல்வி
சங்கதனைக் கட்டிடுவார்
சரஞ்சரமாய் வண்ண மாலையும் இட்டு
செதுக்கப்பட்ட கூரிய
கொம்புக்கு வண்ணம் தீட்டி
பெரியவன் வைரவன் வனத்தில் பெற்ற
ஈச்சை மட்டை கசங்கை
மெல்லிய சுத்தியால் இழைத்து
மாவிலை வேப்பிலை பெரண்டை
ஆவாரம்பூ கன்னிப்பூ நெல்லிக்கொத்து
மாலையாய் தொடுத்து ஒற்றைப்படையில்
மகிழ்வுடனே மாட்டுக்கு மாலையிட்டு
பொங்கிய பொங்கலை ஊட்ட
தண்ணீர் நல்லெண்ணெய் அரப்பிட்டு
தண்ணீரிட்டு கழுவி
பொங்கலூட்டி வாய் கழுவி
தாரை தப்பட்டையோடு
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலே பொலிக!
பொங்கலே பொலிக!! -என்று
போற்றிடுவோம் மாடுகளை என்றும்...
திட்டியதை சுற்றியும் போட்டு
மாட்டை தாண்டவிட்டு
கட்டிடுவோம் புது அச்சில்
கொட்டிடுவோம் புல்லதனை
தெவிட்டத் தெவிட்ட
பசியறியா விரதம் இன்று
விருந்தினரை உபசரித்து -பின்
பசியாறி விருந்தோம்பல் போற்றிடுவோம்
கண்ணுப் பொங்கலை
காணும்பொங்கலாய்
கன்னிப் பொங்கலாய்
கவின்மிகு கலைநிகழ்ச்சிகளும்
களித்திடுவோம் பிள்ளைகள் விளையாடக் கண்டு
காத்திடுவோம் தமிழர் பண்பாடு என்றும்...
அன்புடன் ஜோதிபாரதி
நன்றி
வார்ப்பு
பதிவுகள்
திண்ணை
கீற்று
Thursday, December 4, 2008
விவசாயிகளுக்கு ஏன் அரசு உதவி செய்ய வேண்டும்? பொது புத்தியும், ஆதங்கமும்
இரவெல்லாம் மழை -ஆம்
இடியும் கூட
இரக்கம் இல்லை இந்த வானுக்கு
உறக்கமில்லை எனக்கு
அன்று நட்ட நடவு மஞ்சநேரி வயலில்
விடியும் வரை காத்திருந்தேன்
காலை இரவை தழுவிக்கொள்ளும் வேளையில்
வெளிக்கிட்டேன் வயலுக்கு மண்வெட்டியுடன்
இளங்காடு கடந்து அறை மணி நேரத்திற்குள்
அடைந்தேன் மஞ்சநேரி எல்லையை
எட்டிப்பார்த்தால் எங்கும் வெள்ளக்காடு
சொல்லி மாளாது என் வேதனையை துயரை
தூரத்து வாய்க்காலில் ஆங்காங்கே நட்ட நாற்று
மிதந்து வரக்கண்டேன்
வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டேன்
நீயுமா இந்த வெள்ளத்தில் கலக்கவேண்டும் என்று
வயலை நெருங்கினேன் வாய்க்கால் காணேன்
நட்ட நடவு காணேன் வரப்பு காணேன் -அட
நில அளவைக் கல்லையே காணேன்
நிலைகுலைந்து போனேன்
இறங்கினால் இடுப்பளவு நீர்
உணர்ந்துகொண்டேன் ஒரு சாண் பயிரின் நிலையை
பயிரே தெரியவில்லை
வயிறு மட்டும் எரிந்தது
தண்ணீருக்குள்ளேயும்
வாடிய பயிரை கண்டு வாடியவர் வள்ளலார்
இங்கே மூழ்கிய பயிரை கண்டும் வாடினேன்
வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்
இங்கே வரப்பும் பயிரும் தெரியவேயில்லை
நீர் மட்டுமே உயர்ந்து நின்றது
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மட்டும் தானா?
இங்கே பயிர் நீட்டம் கூடாதா?
தண்ணீரை வரவுக்கு மேல் செலவு செய்ய
முடியாமல் வருந்தினேன்
வடிகால் வெட்டலாம் என்றால்
அதுவும் மிதந்து போகிறது
திரும்பிப் பார்த்தேன்
ஏரிக்கு போய் மதகடைப்போம் என்று
மதகடைப்பதென்றால் பலகை இறக்குவதொடு
சில திரை வைக்கோலும்
தேவைப்படும் என்று தெரியும்
இருந்தாலும் சென்றேன் மஞ்சநேரியை நோக்கி
போகும் வழியில் தண்ணீரின் வேகத்தை கண்டேன்
இருந்தாலும் சென்றேன் மனம் தளராமல்
ஏரியை நெருங்கியதும் நொறுங்கினேன்
கரை உடைத்து நீர் புரண்டோடுவதை கண்டு
தனக்கியன்றதையும் இயலாததையும் செய்ய முடியா
சொல்லொணாத் துயருற்றேன்
வீட்டுக்கு பயணித்தேன் -வழியில்
வந்த யாரையும் பார்க்கவில்லை
யாரும் வயலைப்பற்றி கேட்டால்
பதிலுரைக்க வெட்க்கப்பட்டு
மஞ்சநேரி வயல் எப்படி இருக்கிறது?
அம்மா கேள்விக்கு அயர்ந்து போய்
அமர்ந்தேன் சொல்லற்றவனாய்
பதிலுரைத்தேன் கண்ணீர் துளிகளாக
அடுத்தவருடம் பார்த்துக்கொள்ளலாம் என்ற
அம்மாவின் தேற்றுதல் வரிகளுடன்
ஆறுதல் அடைந்தேன்
என் உள்மனசு சொன்னது
எத்தனை முறைதான்
இந்த வரிகளை கேட்டு ஆறுதல் அடைவது என்று…
அன்புடன் ஜோதிபாரதி
சிஃபி தமிழ் 2008 பொங்கல் சிறப்பு மலரில் பிரசுரமாகியுள்ளது
பதிவுகள்
வார்ப்பு கவிதை இதழ்
திண்ணை
கீற்று
Saturday, April 19, 2008
வள்ளுவர் சிலைக்கும் பூமி பூஜை(சை)யா??? அடப்பாவத்தே...!
தமிழக அரசியல் தலைவர்களின் உதவியோடு இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இதையடுத்து சிலையை தமிழ்ச் சங்க வளாகத்துக்கு இடம் மாற்ற டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் சமீபத்தில் அனுமதிளித்தார்.இதையடுத்து நேற்று தமிழ்ச் சங்க வளாகத்தில் திருவள்ளுவர் சிலை வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் இதற்கான அடிக்கல் நாடு விழாவும், பூமி பூஜையும் நடந்தது.சோமாஸ்கந்த சாஸ்திரி இந்த பூமி பூஜையை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி தமிழ்ச் சங்க தலைவர் கிருஷ்ணமணி, துணைத் தலைவர் சேதுதுரை, பொதுச் செயலாளர் இரா.முகுந்தன், பொருளாளர் சந்தானம், இணைச் செயலாளர்கள் ராகவன் நாயுடு, ரமாமணி சுந்தர், முன்னாள் தலைவர்கள் பாலச்சந்திரன், ராமாமிர்தம், முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு வாசல் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் சிலையை தமிழ்ச் சங்க வளாகத்துக்கு இடம் மாற்றியதும், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் ஆகியோரை அழைத்து திறப்பு விழாவை மிக விமரிசையாக நடத்த தமிழ்ச் சங்கம் முடிவு செய்துள்ளது.
எல்லாம் முரண்பாடாக இருக்கிறதே...!
கலைஞர் நாத்திகர் அவர் திறக்க இருக்கும் வள்ளுவர் சிலைக்கு பூமி பூஜையா?
ஆச்சர்யாமாதான் இருக்கு...!
எனது கண்டனங்கள்!!
கட்டிடத்துக்குள்(தமிழ்ச் சங்கம் மாதிரி) திருவள்ளுவர் சிலை வைத்தால் நல்லது என்று நினைக்கிறேன். தமிழகம் முழுதும் சாலைகளை எல்லாம் சிலைகளால் நிரப்பி(1008 கொடி கம்பங்கள் வேறு), போக்குவரத்துக்கு பெரிய இடைஞ்சலை ஏற்படுத்துகிறார்கள்.
சிலைகள் சில குரங்குகளாலும் காகங்களாலும் சேதத்துக்குள்ளாகின்றன. சிலைகளைப் பார்க்கும் போதே அந்த தலைவரை நினைத்து வேதனைப் பட வேண்டிஇருக்கிறது.
தெருவுக்கு தெரு, சாலைக்குச் சாலை சிலை எழுப்புவதற்கு பதிலாக கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை போல அதற்கு இடம் ஒதுக்கி நினைவுச்சின்னங்களை எழுப்பலாம்.
இனியாவது சிந்திப்பார்களா?
அன்புடன்,
ஜோதிபாரதி.
Wednesday, March 19, 2008
எழவு வீட்டில் எழுந்த இலட்சியம்
விடிய விடியச்
சீட்டாடும் இலட்சியவாதிக்கு
ஒரு கையில் ராஜா இருந்தார்
சிகரெட்டுடன்.
ராணியைத் தேடி
அலைந்த கைக்கு
தேநீர் கொண்டுவந்து
கொடுத்தது
ஒரு சின்ன ராணி.
புகை போக்கிக் கொண்டிருந்த
சிகரெட் வெட்கிச் சிவந்து
தலைகுனிந்தது.
இலட்சியத்தை அடைய
சீட்டுக்கட்டு
ராஜாவை வைத்துக்கொண்டு
போராடிக்கொண்டிருந்தார்
இந்த ஜோக்கர்.
அத்திவெட்டி ஜோதிபாரதி
Saturday, March 15, 2008
சாதி மத வெறியர்களுக்கு இங்கே சுளுக்கு எடுக்கப்படும்
ஆயிரத்தில் ஒருவன்
எல்லா சாதி மதத்தினரின்
மானத்தையும்
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
கழுதைமேல் ஏற்றி
கஞ்சி குடிக்கவைத்து
துவைத்து
சுளுக்கெடுத்து
அழுக்கெடுத்து
காயவைத்து
சூடும் வைத்து
கை கால்களை
மடித்துக் கட்டிப்போட்ட
சலவைத் தொழிலாளி
அன்புடன் ஜோதிபாரதி.
Friday, March 14, 2008
கருகி விழுந்த சருகு
முதிர் கன்னிகளாய் மலர்களும்
பறிக்கப்பட்டு
மாலைகள் தொடுக்கும் வரை
அண்ணனாய்க்
காத்திருந்த கனகாம்பரம்
கதம்பத்தில் சேர்த்துக்
கட்டமுடியாமல்
காய்ந்து
கருகி விழுந்தது
சருகாய்
அன்புடன் ஜோதிபாரதி
Thursday, March 13, 2008
பூங்காவினுள் ஒரு பனை விருட்சம்
ஒத்தைப் பனைமரம்
நுங்கு நுகர்வாரில்லை
காத்திருந்த பனம்பழம்
வழிப்போக்கனின் வண்டியில்
விழுந்தது
காகம் அமர்ந்த கணத்தில்
பழம் சப்பி ருசித்த
வண்டியோட்டி
கொட்டையை மட்டும்
வீசி எறிந்தான்
பூங்கா என்று தெரியாமல்
மரமாக வளர்ந்து நின்றது
ஒரு பனை விருட்சம்
பூங்காவினுள்
வெளிநாட்டுக்காரர்களும் வந்து நின்று
படமெடுத்துக்கொண்டார்கள்
அன்புடன் ஜோதிபாரதி
Sunday, March 9, 2008
கவிதா இனிக்கும் கவிதா!
கற்பனை இல கவி பாட
கவிபட பொருள் பாட
கவிதா இனிக்கும் கவிதா!
கரு களையாமல் -கவின்மிகு
நடையழகை நவில -நல்
சொற்குதிர் திறந்து செய்யுள்
கவிதா இனிக்கும் கவிதா!
அன்புடன் ஜோதிபாரதி
Friday, March 7, 2008
சிறைப்பறவை
சிறைப்பறவை
கூண்டுக்கிளி
அன்புடன் ஜோதிபாரதி
Wednesday, March 5, 2008
ஏழைத் தாயின் ஏக்கம்
இருக்கும் இடமும்
இறுகிய இல்லமும்
ஒரு சாண் வயிற்றுக்கு
ஓர் ஏக்கர் நிலமும் சொந்தம்
சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை என இரண்டு
அழகான பிள்ளைகள் -என
அனைவருமே கண் வைத்தார்
நாடறிந்த பிள்ளைகளாய்
நல்ல பேர் எடுக்க வேணுமென்று
ஊருக்கு அஞ்சி
ஊட்டி ஊட்டி நான் வளர்த்தேன்.
சங்கடங்கள் தெரியாம
சகிச்சுக் கொண்டு நான் வளர்த்தேன்
பள்ளிக் கூடம் போகவேண்டி
படிச்சு படிச்சு நான் சொன்னேன்
சொன்னபடி செய்தார்கள்
சுற்று வட்டாரத்தில்
நல்லவர்கள் மகிழ்ந்தார்கள்
சொத்து பத்து வித்து
சுகங்களையும் விட்டு
மேல்படிப்பு
படிக்கவைக்க
பட்டணத்துக்கனுப்பிவைத்தேன்
வயிற்றுக்குப் பாதகம் பண்ணாமல்
வயிறாரச் சாப்பிடு -என
வாரி வாரி பணம் கொடுத்தேன்
பட்டினி பசியும்
பரிதவிக்கும் வாழ்க்கையும்
பழைய சோறு பருக்கையையும்
வெங்காயம் புளித்துவையல்
பட்சனமாச் சாப்பிட்டேனே
விடுமுறைக்கு வரும் போது
விருந்து வைத்து நான் மகிழ்ந்தேன்
இன்னும் சப்பிடென்று
இட்டுக்கொண்டே நான் இருந்தேன்
படித்த மகனே -உன்னைப்
பார் புகழ வேண்டும் என்று
பரிகாரம் செய்துவந்தேன்
நொடித்துப் போனாலும் பரவாயில்லை-நீ என்னை
நோகடிக்க மாட்டாய் என்று
தடித்த நம்பிக்கையுடன்
தாகம் வந்து காத்திருக்கேன்…
அன்புடன் ஜோதிபாரதி
Tuesday, March 4, 2008
பலிபீடம் பாருக்குள்ளே நல்ல நாடாகும்
வந்து பார்
உன் நிலத்தின் பொழியை
நீயே அளந்து கொள்வாய்
நீ உழுது நட்ட பயிர்
கதிரானதும்
நீயே அறுத்து
உன் குதிரில் இடுவாய்
நீ சேர்த்த சொத்து
உன்னோடு இருக்கும்
சொல்லிக்கொள்ளாமல்
அள்ளிக்கொண்டு ஓடும்
நிலை மாறும்
உன் இடத்தில் நீ உலவ
உதவாக்கரை ஒப்புதல்
தேவையில்லை
வேடர்கள் வீழ்ந்து போவர்
வெள்ளி நிலா உலவும்
விண்மீன்கள் சாமரம் வீசும்
வேங்கைகள் நாடாளும்
வீர மறக் கொடி பறக்கும்
தமிழ் வெள்ளம் அருவியாகும்
பாலாறாய்ப் பெருக்கெடுக்கும்
மல்லிகை
மண மணக்கும்
மாஞ்சோலைக்
குயில்கள் கூவும்
வண்ணமயில்
தோகை விரித்தாடும்
உன் பூமியில்
காகம் மட்டுமே கரையும்
ஓலங்கள் ஒழிந்து
ஏலங்கள் குவியும்
துயரங்கள் துடைத்து
துலாபாரம் பெருகும்
கள்ளிச் செடிகளும்
கவி பாடும்
பூங்கொத்துகள்
புன்னகை
பரிமாறிக் கொள்ளும்
தென்றல் மட்டும்
உன்னைத் தீண்டும்
வானவில் உனக்குத்
தோரணம் கட்டும்
மேகங்கள்
பன்னீர் தெளிக்கும்
முல்லைப் பூக்களுக்கும்
முடிசூட்டப்படும்
நீ நாடிய நாடெல்லாம்
உன் நாட்டை நாடும்
பூவரசு
பொன்னரசாகும்
வையம் போற்றும்
வல்லரசாகும்
எள்ளி நகைத்தவர்
ஏமாந்து போவர்
விதைக்காமல்
முளைக் கொட்டும்
பலிபீடம்
பாருக்குள்ளே நல்ல நாடாகும்
அன்புடன் ஜோதிபாரதி
Friday, February 29, 2008
சென்னை வாசத்தால் கடன் கழியவில்லை
கடுங்குளிர்
அக்கம் பக்கத்திலே
அளவு கடந்த கூட்டம்
கூட்டுரிமைப் பொதுக் கழிப்பறை
நிரம்பி வழிந்தது
நீரில்லாமல்
மக்களால்
மாநகரக் கழிப்பறைக்குச் சென்றால்
மக்கள் வரிசை பிடித்து நிற்கிறார்கள்
காசு கொடுத்தால் இங்கு கொஞ்சம்
கழுவத் தண்ணீர் கிடைக்கும்
வரிசை கழிய வேண்டுமே முதலில்
வரிசை கழிந்து
வந்து பார்த்தால்
கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட கழிவறை
கதவு மட்டும் தான் இல்லை
தண்ணீர் கிடைக்கும்
ஊற்றும் போது மட்டும்
நேரத்தைக் கழிக்கக் கூடாது
சீக்கிரம் வாங்க என்கிற சத்தம்
காதைப் பிளக்கும்
நாசி வேறு பிளக்கப்படுகிறது
மொத்தத்தில்
காசு மட்டும் கழிந்தது
கடன் கழியவில்லை
அன்புடன் ஜோதிபாரதி
Thursday, February 28, 2008
என்றும் சுஜாதா

கொள்ளிடம் சென்று
கடலில் கலந்து விட்டது
அதன் பிரதான நதியும்
கிளை நதிகளும்
என்றும் நம்முடன்...
2000-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கு சன் டெக் சிட்டி செற்றிருந்த போது, புத்தக மற்றும் மென்பொருள் கடைகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வந்தேன். திடீரென்று யாரோ ஒரு பெண்மணியின் குரல் தம்பி! என்று அழைத்தது கேட்டது. சட்டெனத் திருப்பிப் பார்த்தேன். அந்த பெண்மணிக்கு பக்கத்தில் எழுத்தாளர் சுஜாதா நின்று கொண்டு இருந்தார். ஆச்சர்யத்துடன் அவர்கள் இருவருக்கும் புன்முறுவலுடன் வணக்கம் தெரிவித்துவிட்டு, அவர்களிடம் சென்றேன். நான் திரு சுஜாதாவோடு பேசுவதற்குள் அந்த பெண்மணி இவர்தான் எழுத்தாளர் சுஜாதா என்று எனக்கு அறிமுகப் படுத்திவிட்டார். இவ்வளவு உயர்ந்த, பிரபலமான எழுத்தாளரை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறாரே என்று கொஞ்சம் சங்கடத்தில் நெளிந்தது உண்மை. நான் சொன்ன பெண்மணி திரு சுஜாதா அவர்களின் துணைவியார் என்று பின்பு தெரிந்து கொண்டேன். பிறகு சுஜாதா அவர்களிடம் இணையத்தைப் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் பெற்று வந்தேன்.அந்த அமைதியான, அபூர்வமான மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம். அவரை இழந்தாலும், அவருடைய எழுத்துக்கள் என்றும் வாழும் நம்முடன்...
அன்புடன் ஜோதிபாரதி
Tuesday, February 26, 2008
எண்ணெய்க் குளியலுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தேன்
எண்ணெயில் முக்கி மூழ்கடித்துப்
பொரித்துக்கொடுத்தாய் -நீ
அவசரமாய்க் கொடுத்ததை
அவசரமில்லாமல் காத்திருந்து
வாங்கிச் சென்றேன்
ஒன்றை மட்டும் கொடுக்க
மறந்து விட்டாய்
குழம்புக்குப் பதிலாக
அரப்பைக் கொடுத்திருந்தால்
அழகாகக் குளிப்பாட்டி இருப்பேன்
எண்ணெய் என்ன செய்யும் என்று
நீ உரைக்காமல் புரிந்திருப்பேன்.
அன்புடன் ஜோதிபாரதி
Friday, February 22, 2008
அழகின் அழகு அமிழ்கிறது காணீர்!
அழகின் அழகு அமிழ்கிறது காணீர்!இறக்கையில் முதுகில்
இளம் பச்சை
மாம்பழ நிறம்
கண்ணுக்கு மையிட்ட
கச்சிதமான அழகு
வானின் நீல நிறம்
வாலுக்கு வைத்துக் கொண்டாய்
வசீகரிக்கும்
வண்ணக் குங்குமப் பொட்டோ?
வெடுக்கென்ற பார்வை
விஞ்சுகின்ற அழகு
அசைந்து வரும் ஒன்றாய்
தவ்வித் தவ்வி அழகாய்
தவழ்ந்து வரும் அழகு
தமிழச்சியோ என்று
அழகானப் பாதை -நீ
விரும்புகிற பாதை
ஆயுத பூசை அன்று
ஆயிரம் பேர் வருவீர்கள் என
முக அழகைக் காட்டிடுவாய்
சிங்கார நடைதனையே
சிறப்பாக நடந்திடுவாய்
அருமையாக ரசித்திடுவாய் -நீ
அடைந்திடுவார் உன்னை
ஆடச்சொல்வார் பொய்யாக
கூத்தாடு கூத்தாடு” என்று
அனைவரையும் மகிழ்விப்பாய்
இறக்கையையும் பிடுங்கிடுவார்
அருமை தெரியாதார்
தவறாகப் புரிந்து கொண்டு
கவலையிலே வாடுகிறோம்
Thursday, February 21, 2008
கிராமங்களைச் சீரழிக்கும் திமிங்கிலங்களும், திரைகடலோடிகளும்
கிராமங்களைச் சீரழிக்கும் திமிங்கிலங்களும்,திரைகடலோடிகளும்கிராமங்களில் உள்ள கோவில்களில் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாக்கள் களை கட்டும். கிராம மக்களுக்கு இந்த தருணம் மகிழ்ச்சியான தருணமும் கூட. உறவினர், நண்பர்களை திருவிழாக்களுக்கு அழைத்துவந்து உபசரிப்பது. புத்தாடை அணிந்து மகிழ்வது. இன்னும் பட்டியல் நீளும்.
திருவிழாக்கள் ஒரு மாதம், 15 நாட்கள், ஒருவாரம், ஒரு நாள் இப்படி வசதிக்கு தகுந்தபடி கொண்டாடுவார்கள். இந்த கொண்டாட்டங்களில், திரைப்படங்கள் திரையிடுதல், கரகாட்டம், நடன நிகழ்ச்சிகள், சமுக நாடகங்கள் மற்றும் புராண நாடகங்கள் வள்ளித் திருமணம், அரிச்சந்திர மயானகாண்டம், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி போன்றவைகளும் வசதிக்கேற்ப சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
சமீப காலமாக இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி, கலை இரவு என்று ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக நண்பர் திரு.சரவணன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் விவரித்த விதம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. சினிமாவில் நாம் பார்த்து ஆபாசம் என்று சொல்கிறோம் அல்லவா? அதையும் தாண்டி அருவெறுக்கத்தக்க விரசமான ஒரு நிழ்வாக இருப்பதாகவே திரு சரவணன் மேலும் கூறுகிறார். இதை கோவில் போன்ற புனிதமான இடங்களாகக் கருதப்படும் இடங்களில் நிகழ்த்துவது ஏனோ? அதையும் தாண்டி கிராமத்துக் கோவில்களில் இந்த நிகழ்ச்சியின் போது இளம் சிறார்கள், குழந்தைகள் கொட்ட கொட்ட விழித்திருந்து பார்ப்பதாகவும் தெரிவித்தார். இது மேலும் நமது வேதனையைக் கூட்டியது. இந்த பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் வானரங்களும் உட்கார்ந்து பார்ப்பதாகவும் கேள்விப்பட்டேன். அவர்களை அறுபதைத் தாண்டிய திமிங்கிலங்களாக, வாளை மீனு, விலாங்கு மீனாக சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் உருவகப்படுத்தியுள்ளார்கள். குழந்தைகளாக இருக்கும் போது நடக்கும் விடயங்கள் அவர்கள் வாழ்நாள் இறுதி வரை பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பது ஏன் இந்த திமிங்கிலங்களுக்குத் தெரியவில்லை?இன்னொரு விடயம், இந்த நிகழ்ச்சிக்கு ஆகும் செலவு சுமார் ஐம்பது முதல் அறுபதாயிரம் என்றும் கேள்விப்பட்டேன். நண்பர் திரு சரவணன் கூற்றுப்படி, இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு மற்றும் பண உதவியை அந்த கிராமத்தைச் சேர்ந்த "மலேசிய,சிங்கை வாழ் ஊழியர்கள்" செய்திருக்கிறார்கள். இது அதை விடக் கொடுமை. நீங்கள் கடின உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் குடும்பத்துக்கு, அம்மாவிற்கு, அப்பாவிற்கு, மனைவிக்கு அனுப்புங்கள். ஏன் இப்படி உங்கள் பணத்தை வீணடிக்கிறீர்கள். வீணடிப்பதோடு மட்டும் அல்லாமல் பிஞ்சுக் குழந்தைகளையும், அப்பாவி கிராம மக்களையும் கெடுத்து, எடுத்து வைத்து மூடாதீர்கள். அப்படியே நீங்கள் எதாவது ஊருக்கு செய்ய வேண்டும் என்று நினைத்தால் நன்றாகப் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப் படுத்துங்கள், விளையாட்டு விழாவிற்கு பண உதவி செய்து உங்களை கௌரவப் படுத்திக் கொள்ளுங்கள். பள்ளிக் கட்டிடம் சரியில்லை என்றால் புதிதாகக் கட்டிடம் கட்டி கொடுங்கள். நூலகம் கூட கட்டிக் கொடுக்கலாம். குளத்தைத் தூர் வார உதவி செய்யலாம்.
இதைப் படிக்கும் நல்லெண்ண சமூக ஆர்வலர்கள், தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் தங்களை அறியாமல் இந்த செயலில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், இதன் தீமைகளை நாசூக்காக எடுத்துக் கூறி இது போன்ற நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன் ஜோதிபாரதி
Saturday, February 16, 2008
ஆயுதம் செய்வோம்
நிராயுதபாணியாய் நிற்கிறேன்
நிலை தடுமாறிப் போகிறேன்
ஊக்கம் கொடுக்க
ஒரு குருவி இல்லை
ஒப்பாரி வைக்கிறேன்
ஆக்கம் செய்வதற்கு
அஞ்சு காசு இல்லை
அவதிப் படுகிறேன்
ஏக்கம் ஒன்றே
கொண்டுள்ளதால் -யாரும்
ஏறெடுத்துப் பார்க்கவில்லை
நோக்கம் இல்லாமல்
நொந்து தவித்ததனால்
தூக்கமும் இழந்து
தவிக்கிறேன்
கோபம் கொப்பளிக்க
குறுக்கு வழியில் போனதால்
குட்டிச் சுவாராகிப்
போனதே மிச்சம்
அன்பே அறியவில்லை
அரவணைப்பு தெரியவில்லை
அன்பென்பது அமுதசுரபி -நான்
அதை அறியாத் தனிப்பிறவி
நிலை தடுமாறிவிட்டேன்
நிராயுதபாணியாக நிற்கிறேன்
அன்பு மட்டுமே ஆயுதமாய் -ஆம்
ஆயுதம் செய்வோம்
அன்புடன் ஜோதிபாரதி
எனதருமை வள்ளி
காலை எழுந்தவுடன்
கணிவுடனே வந்திடுவாள்
சோலையிலிருந்து
சொக்கவைக்க வந்திடுவாள்
நாளையும் அவள் வேண்டும் -என்று
நச்சரித்துக் கொண்டிருப்பேன்
அம்மாவிடம் சொல்லி
அனுசரித்துப் போகச்சொன்னேன்
அவளின் குரல் கேட்டு
அவசரமாய் ஓடிடுவேன்
ஆசை ஆசையாய் -அவளை
அள்ளி அணைத்துக் கொள்வேன்
வெளுத்த நிறத்தாள்
வழவழக்கும் தோலாள்
வசீகரிப்பாள் என்னை
சுவைக்க நினைத்திடுவேன்
சும்மா இருக்க மாட்டேன்
பக்கத்து ஊரிலிருந்து வரும்
பதுமையல்லவா அவள்
சொர்க்கத்தாள் என்று
சொல்லிச் சொல்லி
சுவைத்திடுவேன்
அவள் எனக்குத் தந்தது
உரம் அள்ளி
என்னை அள்ளிக் கொண்ட
அவளோ மரவள்ளி
அன்புடன் ஜோதிபாரதி
வட மொழி - தமிழ் மொழி
பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்
அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்
அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது
அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை
அகந்தை - இறுமாப்பு,செருக்கு
அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்
அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு
அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்
அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை
அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை
அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்
அக்கணம் - அப்பொழுது,அந்நொடி
அக்கரம் - எழுத்து
அட்சரம் - அழிவில்லாதது
அக்கியாணி - அறிவிலான்
அஞ்ஞானி - புல்லறிவாளன்
அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி
அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு
அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை
அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி
அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்
அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு
அங்குலம் - விறக்கட்டை,விரலளவு
அசத்தை,அசத்தியம் - பொய்
அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்
அசரீரி - வானொலி,உருவற்றது
அசித்து - பயனின்மை
அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை
அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை
அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்
அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்
அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்
அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்
அஞ்சிட்டம் - கதிரவன்
அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது
அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்
அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது
அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்
அட்டபந்தனம் - எண்புறக்கட்டு
அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்
அதமம் - கீழ்மை,கடைத்திரம்
அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்
அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்
அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்
அதிகாலம் - விடியற்காலம்
அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை
அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்
அநந்தகோடி - எண்ணத்தொலையாதன
அநந்தம் - அளவின்மை,முடிவில்லது
அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்
அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை
அநீதி - முறைகேடு
அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்
அநுசரணை - சார்பு,சார்பு நிலை
அநுசிதம் - பொய்,தகாதது
அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி
அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை
அனுமானப் புரமானம் - கருதலளவை
அநேகர் - பலர்
அந்தகன் - அழிப்போன்,குருடன்
அந்தகாரம் - இருள்,அறியாமை
அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்
அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை
அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்
அந்தி - முடிவு,மாலைக்காலம்
அந்திய கிரியை - இறுதிச் சடங்கு
அந்நியர் - பிறர்,அயலார்
அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்
அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்
அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு
அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு
அபிதானம் - பெயர்
அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்
அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு
அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு
அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்
அபேச்சை -அவா,விருப்பம்
அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை
அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி
அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று
அமரத்துவம் - அழிவின்மை
அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்
அந்நியர் - பிறர்,அயலார்
அதிகம் - மிகுதி,அளவின்மை
அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை
அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்
அம்பாரம் - குவியல்
அயோக்கியம் - தகுதியினமை,தகாதது
அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்
அரணியம் - காடு
அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு
அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி
அருவம் - உருவின்மை,அழகின்மை
அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு
அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்
அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு
அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை
அவகீர்த்தி - இழிவு,புகழின்மை
அவக்கியாதி - வசை,இகழ்ச்சி
அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு
அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை
அவதரித்தல் - பிறத்தல்
அவதாரம் - பிறப்பு,இறங்குகை
அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை
அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை
அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை
அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு
அவயவம்,அவையவம் - உறுப்பு
அவலன் - உடற்குறையன்,வீணன்
அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,
அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு
அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்
அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை
அனுதாபம் - இரக்கம்
அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு
அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை
அனேகம் - பல,எல்லாம்
அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை
அன்னம் - சோறு,உணவு,அடிசில்
அன்னியன் - பிறர்,அயலார்
அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்
ஆகம் -உடல்,மார்பு
ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி
ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்
ஆகாய விமானம் - வான ஊர்தி
ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு
ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்
ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்
ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி
ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு
ஆச சங்கை -ஐயம்
ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா
ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு
ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு
ஆசீர்வாதம் - வாழ்த்துரை
ஆசுவாசம் - இளைப்பாறுகை
ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு
ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது
ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்
ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை
ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை
ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்
ஆஞ்ஞை -ஆணை,கட்டளை
ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு
ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு
ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்
அந்நியர் - பிறர்,அயலார்
ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்
ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு
ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்
ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு
ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்
ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு
ஆத்துமா,ஆன்மா - உயிர்
ஆந்ந்தம் - இன்பம்
ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்
ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்
ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி
அபூர்வம் - வினைப்பயன்
ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்
ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு
ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு
ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்
ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்
ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு
ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்
ஆரணியம்,ஆரண்ணியம் - காடு
ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்
ஆரம்பம் - தொடக்கம்
ஆரம்பித்தல் - தொடங்கல்
ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்
ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்
ஆரோக்கியம் - நலம்,நோயின்மை
ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்
ஆரோபித்தல் - ஏற்றுதல்
ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்
ஆர்மோனியம் - இசைக்கருவி
ஆர்வம் - அன்பு,விருப்பம்
ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்
ஆலகம்- நெல்லிமரம்
ஆலம் - நஞ்சு
ஆலயம் - கோயில்
ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்
ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி
ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை
ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு
ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்
ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்
ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு
ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்
ஆன்மா - உயிர்
இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு
இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்
இச்சகம் - முகமன்
இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை
இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை
இட்டசித்தி - விருப்பப்பேறு
இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்
இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்
இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை
இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை
இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்
இந்து - நிலா,திங்கள்,அம்புலி
இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை
இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்
இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை
இரசாயனம் - பொருளியைபு
இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு
இரட்சை - காப்பு
இரணம்,ரணம் - புண்
இரதம்,ரதம் - தேர்
இரத்தம் - குருதி,செந்நீர்
இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி
இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்
இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு
இராகு - கருங்கோள்
இராக்கதர் - அரக்கர்
இராசசூயம் - அரசர் வேள்வி
இராசா - அரையன்,மன்னன்,அரசன்
இராச்சியம் - நாடு,அரசியல்
இராத்திரி - இரவு,கங்குல்
இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி
இதய கமலம் - நெஞ்சத்தாமரை
இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு
இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்
இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்
இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்
இலங்கணம் - பட்டினி
இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை
இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை
இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்
இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு
இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை
இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு
இலீலை,லீலை - விளையாட்டு
யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு
உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை
உஷ்ணம் - வெப்பம்,சூடு
உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு
உசிதன் - தக்கோன்
உச்சம் - உயர்ச்சி,சிறப்பு
உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்
உச்சரிப்பு - எழுத்தோசை
உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்
உச்சி - மேடு,முகடு
உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்
உதயன் - பகலோன்
உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று
உத்தமம் - உண்மை,மேன்மை
உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை
உத்தரவு - கட்டளை
உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்
உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய
உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்
உபதேசம் - அருண்மொழி,அறிவுரை
உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு
உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்
உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்
உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்
உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது
உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி
உருசி,ருசி - சுவை
உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி
உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்
உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு
உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி
உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு
உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்
ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு
ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு
எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி
எந்திரம் - பொறி
எமன் - கூற்றுவன்,மறலி
ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை
ஏகம் - ஒன்று,தனிமை
ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு
ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்
ஏடணை,ஏஷணை - விருப்பம்
ஐது,ஹேது - காரணம்
ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை
ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு
ஐதீகம்,ஐதிகம் - உலகுரை
ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்
ஓமம்,ஹோமம் - வேள்வி
ஒளடதம்,ஒளஷதம்- மருந்து
களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்
கடகம் - கைவளை,வளையம்
கடம் - கடம்,யானைக்கதுப்பு
கடாட்சித்தல் - அருளல்
கடாரம் - கொப்பரை,தேங்காய்
கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி
கடிகை - நாழிகை,தாழ்க்கோல்
கடினசித்தம் - வன்னெஞ்சம்
கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை
கடூரம்,கொடூரம் - கொடுமை
கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்
கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது
கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்
கணிகை - பொதுமகள்
கணிசம் - அளவு,மேம்பாடு
கணிதம் - கணக்கு
கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து
கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு
கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது
கதலி - வாழை
கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை
கனகம்,கநகம் - பொன்
கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை
கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை
கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்
கந்மம்,கருமம் - தொழில்,வினை
கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு
கபாலம் - தலையோடு,மண்டையோடு
கபோதி - குருடன்
கப்பம் - இறை
கமண்டலம் - நீர்க்குடுவை
கமலம் - தாமரை,நீர்
கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு
கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை
கரகம் - வட்டில்,நீர்க்குடுவை
கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்
கரணம் - கருவி,ஐம்பொறி
கரம் - கை
கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்
கருணை - அருள்,இரக்கம்
கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்
கர்ப்பவதி - சூலி
கர்ப்பாசயம் - கருப்பை
கர்வம் - செருக்கு,இறுமாப்பு
கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை
கலி - வறுமை,துன்பம்
கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி
கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்
கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்
கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்
கவி - செய்யுள்,புலவன்,பாட்டு
கவுளி,கெளளி - பல்லி
களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்
கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து
கனம் - சுமை,பளு,பளுவு
காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்
கசாயம்,கஷாயம் - காவி
காஞ்சிரம் - எட்டி மரம்
காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி
காதகன் - கொலையாளி
காயசித்தி - நீடுவாழ்ப் பேறு
காயம் - உடல்,யாக்கை,வான்
காரிய கர்த்தா - வினைமுதல்வன்
காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்
கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை
கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு
கிஸ்தி - திறை,வரி
கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்
கிரகஸ்தம் - இல்லற நிலை
கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு
கிரணம் - ஒளி,கதிர்
கிரந்தம் - நூல்,எழுத்து
கிரமம் - ஒழுங்கு,முறைமை
கிரயம் - விலை
கிராதன் - குறவன்,வேட்டுவன்
கிரி - மலை,பன்றி
கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு
கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு
கிரீடம் - முடி
கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை
கிலம் - கழிவு,அழிவு,சிறுமை
கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்
கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு
கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா
கீலகம் - ஆணி,பொருத்து
குஞ்சரம் - யானை
குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்
குணஷ்டை - தொல்லை,துன்பம்
குதர்க்கம் - அழிவழக்கு
குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு
குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்
குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்
கும்பம் - குடம்
குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை
குரோதம் - உட்பகை
குலாலன் - குயவன்
குலிசம் - வேற்படை
குன்மம் - சூலை,வயிற்று வலி
கேதம் - துன்பம்,இடர்,குற்றம்
கேவலம் - சிறுமை,தனிமை
கோகிலம் - குயில்
கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை
கோஷ்டி - கூட்டம்
கோடி - நூறு நூறாயிரம்
கோதண்டம் - வில்
கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்
கெளரவம் - மேன்மை,பெருமை
சக - கூட,உடன்
சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை
சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்
சகமார்க்கம் - தோழமை நெறி
சகலம் - எல்லாம்
சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு
சகா - தோழன்,துணை
சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு
சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை
சகி,சகீ - தோழி
சகிதம் - உடன்
சகுணம் - குணத்தோடு கூடியது
சகுந்தம் - கழுகு,பறவை
சகுனம் - குறி
சகோதரம் - உடன்பிறப்பு
சகோதரி - உடன்பிறந்தாள்
சக்கரம் - உருளை,வட்டம்
சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி
சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்
சங்கிதை - தொகுதி,வரலாறு
சடுதி,சடிதி - விரைவு
சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு
சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு
சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று
சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு
சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்
சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை
சதகோடி - நூறு கோடி
சதசு - அவை
சதம் - நூறு நிலை
சதானந்தம் - இடையறா வின்பம்
சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி
சந்தகம் - எப்பொழுதும்
சந்தானம் - வழி,வழித்தொடர்பு
சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்
சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்
சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்
சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து
சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்தேகம் - ஐயம்,ஐயுறவு
சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு
சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்
சந்நியாசம் - துறவு,துறவறம்
சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்
சபம்,ஜெபம் - உருவேற்றல்
சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா
சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்
சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்
சமஷ்டி - தொகுதி,எல்லாம்
சமதை - ஒப்பு
சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்
சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்
சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை
சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை
சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை
சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்
சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை
சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்
சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது
சமாராதனை - உளநிறைவு
சமி,ஷமி - பொறு
சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி
சமீபம் - அருகு,அணமை,மருங்கு
சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்
சமுதாயம் - குமுகம்,கூட்டம்
சமுத்திரம் - கடல்
சமை,ஷமை - பொறுமை
சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி
சம்பத்து - செல்வம்,பொருள்
சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்
சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை
சம்பு ரேட்சணம் - தெளித்தல்
சம்பூரணம் - நிறைவு
சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு
சம்ரஷணை - பாதுகாப்பு
சயம்,ஜெயம் - வெற்றி
சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி
சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்
சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்
சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்,யாக்கை,மெய்
சருமம்,சர்மம் - தோல்
சர்ப்பம் - பாம்பு
சர்வகலாசாலை -
பல்கழைக் கழகம்சலதளம்- அரசமரம்
சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு
சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை
சல்லாபம் - உரையாடல்
சவம் - பிணம்
சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்
சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு
செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்
சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை
சற்குணம் - நல்லியல்பு
சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு
சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை
சாகரம் - கடல்
சாகுபடி - பயிர் செய்தல்
சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்
சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை
















