Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, June 19, 2010

பாதித்தவைகள் - என்னை மட்டுமல்ல

கவிஞர் கோ.வசந்தகுமாரன் எழுதிய ”மனிதன் என்பது புனைபெயர்” எனும் கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. அதில் புனைவுகள்,உருவகங்களைத் தேடியபோது மனிதன் மட்டுமே மிஞ்சினான். அவன் மிஞ்சிச் செல்வதை அப்படியே கவிதைகளாக வடித்திருக்கிறார். இவரது கவிதைகளில் உண்மைகளை சம்பவித்து நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். ஓர் எளிய நடுத்தர,விவசாய குடும்பத்து பருவங்களை பகட்டில்லாமல் கவிதையாக பகிர்கிறார். அதில் என்னைப் பாதித்த மூன்று கவிதைகளை உங்களுடன் பகிர்வதில் மன நிறைவு கொள்கிறேன்.


விருது

தேசிய விருது
கிடைத்தது குறித்து
அம்மவுக்குக் கடிதம் எழுதினேன்

ஒரிசா கவர்னரிடம்
விருது வாங்கவிருப்பதையும்
அப்படியே
கல்கத்தாவிலிருந்து
டார்ஜிலிங் போக
உத்தேசித்திருப்பதையும் கூட

பத்துநாள் கழித்துப்
பதில் வந்தது

கடிதம் கிடைத்தது
கவிதா நலமா

கல்கத்தா போனால்
ப்ரவீணாவைக்
கேட்டதாகச் சொல்

டார்ஜிலிங்கில்
நல்ல டீத்தூள் கிடைக்குமாம்
வரும்போது வாங்கிவா



கூடல்

வண்ணத்துப்பூச்சிகள்
ஒன்றையொன்றிணைந்தபடி
மலர் சாய்க்கும்

பறந்தபடியே
ஈக்களுக்கு அது முடியும்

தவளைகள்
ஒன்றைவிட்டு ஒன்றுமீள
அரை நாளாகும்

சில நொடிகளுக்குள்
கோழிகள்
சிறகு மடக்கும்

கால் புகுந்து ஓடும் நாய்கள்
இன்னொன்று துரத்தி
முதுகு திருப்பும்

இணையின்
சிறுநீர் முகர்ந்து
உதடு பிதுக்கிச்
சூரியன் பார்க்கும் ஆடுகள்

கெக்கலித்து
வால்தூக்கி
இடம் காட்டும் பல்லிகள்

உச்சத்தில்
வாலூன்றி நிற்கும்
பின்னிப் பிணைந்த
சாரையும் நாகமும்

வெட்கம் கெட்டுச் சல்லாபித்தாலும்
இன்ன காலங்களில் தான்
இயங்க வேண்டுமென
மிருகங்களுக்குப் பருவங்களுண்டு

மறைவிடம் தேடும்
மனிதனுக்கு



கவனிப்பு

ஏழையென்று பொய்சொல்லி
இலவச விடுதியில்
இடம்வாங்கித் தந்தாள் அம்மா

புழு நெழியும்
சோறானாலும்
கூடவே சுவாசிக்க சுதந்திரக்காற்றும்
என்பதால்
விடுதி கசக்கவில்லை
எனக்கு

பாடம் பிடிக்காது

வகுப்பறையின் சன்னல் வழியே
கொய்யா மர நிழலில்
விளையாடும் அணில் பிடிக்கும்

சுவரேறிக் குதித்து சினிமா பார்க்க
அம்மா கொடுத்த
காசுகள் உதவும்

வகுப்புக்குச் செல்லாமல்
நண்பர்களோடு
கள்ளருந்தப் போனதுமுண்டு

பரீட்சைக்குப் படிக்க
வயல்வெளி தேடி
பல் கூசும்வரை
புளியம்பிஞ்சுகளைத்
திண்றுவிட்டுத் திரும்புவோம்
படிக்காமலே

விடுமுறையில்
வீட்டுக்கு வரும்போதெல்லாம்
தங்கைக்கும் தம்பிகளுக்கும்
தெரியாமல்
சோற்றுக்குள் மறைத்து
அவித்த முட்டை வைப்பாள்
அம்மா எனக்கு






Friday, June 18, 2010

காதல் கொண்டேன் - தபூ சங்கர்




ஒரு கவிதைத் தொகுப்பில் ஏறத்தாழ ஐம்பது அல்ல்து நூறு கவிதைகள் வசதிக்கேற்ப இடம் பெறுவதுண்டு. ஆனால் திருமணத்திற்கு மாலையிட்டு மொய் எழுதுவது போல் ஐம்பத்தொன்று, நூற்று ஒன்று என்று கவிதைத் தொகுப்பை அழகாக வெளியிடுகிறவர் திரு. தபூ சங்கர்!

ஐம்பதொன்றாவது/ நூற்றி ஒன்றாவது கவிதையாக மிளிர்வது அவருடைய கவிதை நூல், எவ்வளவு அழகாக, நேர்த்தியாக, பார்த்துப்பார்த்து செய்வாரோ மனிதர். ஆம் அவரது கவிதைத் தொகுப்பே ஒரு கவிதை தான்! அது ஓர் அழகு!

ஒவ்வொரு தொகுப்பிலும் சில கவிதைகள் நம்மைக் கவர்வதுண்டு. அந்த வகையில் கவிஞர் தபூ சங்கரின் “சேலையோரப் பூங்கா”(இந்த பேரே கவர்ச்சியா இருக்குங்கிறது வேற விசயம்) எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற தலைப்பில்லா கவிதைகளில் நம்மைக் கவர்ந்த சில வரிகள்!


நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில்
உன்னொடு என்னை அனுப்பிவிட்டு
நீ திரும்பி வரும்வரை
வெற்றிடமாய்க் காத்திருக்கிறேன்


நீ என்னை காதலிக்க ஆரம்பித்து
இத்தனை நாட்கள் ஆகியும்
என்னிடம் காதலைச் சொல்லாமல்
நீ தவிர்ப்பதைப் பார்த்து...
என்ன இவன் இவ்வளவு
பயந்தாங் கொள்ளியாய்
இருக்கிறான் என்று
கவலை எல்லாம் கொள்ளவில்லை நான்.

காதலைச் சொல்ல இப்படித் தவிக்கிறான்
எனில்
கண்டிப்பாய் இதுதான் இவனுக்கு
முதல் காதலாய் இருக்கும் என்கிற மகிழ்ச்சியில்
உன் தவிப்பை ரசித்துக் கொண்டிருக்கிறேன்


ஒவ்வொரு நாளும்
ஒரு பிறை நிலவைப்போல
உன்னைச் சந்திக்க வருகிறேன்

உன் காதலோ
என்னைப் பெளர்ணமியாக்கி
அனுப்பி வைக்கிறது



உன்னிடம் சேர்க்கும்படி
அனுப்பப்பட்ட தபால் நான்

எனக்குள் என்ன இருக்கிறது
என்பதை
நீ தான் பிரித்துப் பார்க்கவேண்டும்



எனக்குத் துணையாக
போயும் போயும்
உன்னை அனுப்புகிறாரே
என் அப்பா

என் ஆபத்தே
நீதானே


புல் தரையில் நடக்காதீர்கள் என்ற
அறிவிப்பைப் பார்த்து
நான் தயங்கி நின்றேன்

அந்த அறிவிப்பு மனிதர்களுக்குத்தான்
பனித்துளிக்கு இல்லை
நீ நடக்கலாம் என்றாய்

நான் உருகிப்போனேன்



Friday, December 11, 2009

மண்ணாங்கட்டி பைரமுத்து நடத்திய தமிழக தலைவர்களின் கவியரங்கம்

மிகப் பெரிய தலைவர்களை கவியரங்கத்திற்கு கவிஞர் மண்ணாங்கட்டி பைரமுத்து அழைத்திருந்தார்.


அதில் கலந்து கொண்ட தலைவர்கள் எளிமையான சில கவிதைகளை முத்தாய்ப்பாகச் சொல்லி கவியரங்கத்தை வரலாறு காணாதப் கவியரங்கமாக மாற்றினர்.

இதோ கவியரங்கம்....

கவிஞர் என்.வரதராசன்

கேரளா மேற்கு வங்கம் சீனா ரஷ்யா
என் தாய் வீடு

தமிழ்நாடு இந்தியா
என் தாய்நாடு

நாடு நலம் பெற
வீடு வளம் பெற வேண்டும்


கவிஞர் மரு.இராமதாசு

மம்மியைப் பார்க்கும் போதே
கலையழகு தெரியும்

உடன் பிறப்பைப் பார்க்கும் போதே
உடன் பிறவாதது ஞாபகம் வரும்

பாபாவையும் பிடிக்காமல் தூக்க வேணும்
பங்காருவையும் தான்

ராச்சியத்தை ஆள
ராச்சிய சபை போதும்

பூச்சியத்தை ஆள
கூட்டணி வைத்தது போதும்


கவிஞர் தா.பாண்டியன்

அம்மா
பேசும் அழகே தமிழ் விழி

நீ பேசாதிருந்தாலும்
போயாஸ் தோட்டம் தான் என் வழி

பாரதி கண்ட வழுதி
நின்னை பாராட்டி நான் எழுதி

பச்சைத் தமிழன் நான்
நீயும் தான்

செங்கொடி எனக்கெதற்கு
சபரிமலை பஞ்சாமிர்தம்மும்
நேந்திரம் பழமும்
முல்லைப் பெரியாறு வழக்கு
வரும் போது மட்டும்
வாய்க்குள் வழுக்குகிறது

வைகோ
பொய்க்கோ
ஹைக்கு


கவிஞர் தொல்.திருமாவளவன்

நின்னைத் தமிழ் என்றேன்
தவறு
நீதான் தமிழ்

நின்னைச் சரணடைந்தேன்
நின் புகழ் போற்றினேன்
உள்ளுக்குள் மனதைத் தேற்றினேன்

எப்போது விடுவாய் என் மக்களை
நம்பிக்கையுடன்
நினக்கு சாமரம் வீசினேன்

வீசிக்கொண்டெ இருக்கிறேன்
இன்னும் நீ விடவில்லை

நீயும் போற்க்குணமுள்ள போராளி
உனக்குத் தேவை அடி
மைகள் என்று மட்டும் அறிந்து கொண்டேன்.


கவிஞர் கே.வி.தங்கபாலு

முகவர் நான் அன்று
முகவரி கொடுக்கிறேன் பலர்க்கு இன்று

அம்மா என் கொள்கை
அன்னை என்பது அதன் பொருள்

இத்தாலி வேண்டும் என்றால்
எத்தாலி போனால் என்ன என்பது
என் மதி நுட்பம்

கல்லூரியால் ஊரித்திளைத்தேன்
கனியாகிப் படைத்தேன் இக்கவித்தேன்

கோஷ்டிகளை ஒருங்கிணைக்க
எனது கோஷ்டிக்கு அழப்பு அனுப்புறேன்

சை கிந்த்!


கவிஞர் ஜெ.ஜெயலலிதா

கச்சத்தீவைத் தாரை வார்த்து
கொச்சையாக கவிபாடும்
இச்சைச் செல்வர்

உச்சம் எனக்கருதி
எச்சத்திற்காசைப்பட்டு
மிச்சம் மீதி இல்லாமல்
இனத்தை அடகு வைக்கும்
மிராசுதார்

எண்பத்தாறு வயதிலும்
மைனராக
செய்யும் மைனாரிட்டி ஆட்சி

எப்போது விடியும்
ஒரே குளிர்
நல்ல தூக்கம்
ஊட்டி கொட நாட்டில்...!



கவிஞர் வைகோ

பொடா தடா
நான் பார்க்காததாடா

அம்மா என்றால் அன்பு
அதுவே என்றன் பண்பு
போயஸ் அழைப்பும்
எனது விழிப்பும்
சந்திக்கும் நேரம் ஒன்று

ஆளும் கட்சி சந்திக்கு
வரும் நேரம் உண்டு

ஈழம் என்னும் ஈர நிலத்தை
காயவிட்ட கயவர்களின் சூதை
வெல்வோம்


கவிஞர் மு.கருணாநிதி

தமிழை விற்றேன்
தமிழனைப் பெற்றேன்
தமிழனை விற்றேன்
தமிழை வாழ வைக்கிறேன்









Tuesday, March 31, 2009

படித்ததில் பிடித்தது, நெஞ்ச வர்ணக் கிளி -தபூ சங்கர்

படித்ததில் பிடித்தது, நெஞ்ச வர்ணக் கிளி -தபூ சங்கர்

அண்மையில் படித்த தபூ சங்கரின் நெஞ்ச வர்ணக் கிளி
கவிதைத் தொகுப்பில் எனக்கு பிடித்த சில காதல் கவிதைகள்



உன்னை நேரில் பார்த்து
எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன
அதனால் என்ன
உன்னை நினைத்துப் பார்த்து
ஒரு நொடி கூட ஆகவில்லையே

*************************************

நீ அப்போது குடியிருந்த வீட்டை
ஒருமுறை இப்போது நான் பார்த்தேன்
பாவம்
என்னை மாதிரி உன் ஞாபகத்தோடு
இன்பமாய் வாழத் தெரியவில்லை அதற்கு

*************************************

ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்

*************************************

ஒரு குழந்தையைப்போல
உன் அப்பாவிடம் நீ
கொஞ்சி விளையாடியதை
நான் பார்த்ததும்
நாக்கைக் கடித்துக்கொண்டு
முகத்தைத் திருப்பிக்கொண்டாய்
எனக்கும் உன் அப்பாவுக்கும்
தெரியாமல்.
அதை நினைக்கும் போதெல்லாம்
நான்
முகத்தைத் திருப்பிக்கொண்டு
நாக்கைக் கடித்துக் கொள்கிறேன்
யாருக்கும் தெரியாமல்

*************************************

உன்னை நினைத்தபடி
ஓடும் பேருந்திலும் ஏறுகிறேன்
ஓடாத பேருந்திலும்
உட்கார்ந்துவிடுகிறேன்

*************************************











Friday, January 30, 2009

கவிஞர் மலர்விழியின் கருவறைப் பூக்கள் - கவிதைத் தொகுப்பு வெளியீடு

கருவறைப் பூக்கள் - கவிதைத் தொகுப்பு வெளியீடு

கெழுதகை நட்பும், விழுமிய சுற்றமும் காணக்கிடைக்கும் இலக்கிய நிகழ்வுகளில், கவிமாலை, கவிச்சோலைகளில் என்று யாம் விருபினாலும் அரிதாகக் கலந்து கொள்ளும் நிலை தான் இன்றும்,

"உத்தியோகம் புருஷலட்சணம்"(இல்லத்தரசனுக்கு வேலை அழகு) எனும் ஆணாதிக்கச் சொற்றொடர் புலம் பெயர்ந்த வாழ்க்கையில் பொய்யாகிக் கொண்டிருக்கும் காலத்தில்,

சாதிகள் இல்லையடிப் பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் இந்த பாரதியின் பாடலை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க பயந்து கொண்டிருக்கும் காலம். சாதி என்றால் என்ன? குழந்தைகள் கேட்டால்?

உறவுகள், நண்பர்களின் குரல்களை கைப்பேசியின் ஒலிபெருக்கியில் மட்டுமே கேட்டுக் கொண்டு அவசர கோலம் அள்ளித் தெளிக்கும் மாவு என்றில்லாமல்,
மெல்லத்தமிழினி சாகும் என்பவர்களுக்கு, மெல்லத்தமிழினிதாகும் என்று செவியில் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பண்பாட்டு, இலக்கிய நிகழ்வுகள்.

அந்த வகையில் சிங்கப்பூர் கவிஞர் திருமதி மலர்விழி இளங்கோவன் அவர்களது "கருவறைப் பூக்கள்" முதல் கவிதைத் தொகுப்பு வெளியீடு ஒரு முத்தாய்ப்பு.

புலவர் பாண்டித்துரையும், கவிஞர் மாதங்கியும் விழா பற்றி என்னிடம் முன்னரே தெரிவித்திருந்தார்கள். கவிஞர் அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். விழாவிற்கு வருகிறேன் என்று வாக்களித்தாயிற்று. சிங்கையில் சீனப் புத்தாண்டுக்கு விடுமுறையாக இருந்தாலும், பெரும்பாலான சீனரல்லாத தமிழர், மலாய்க்காரர்களுக்கு வேலை இருக்கும். அந்தவகையில் எனக்கும் அன்று வேலை இருந்தது. எப்படியும் கலந்து கொள்ளவேண்டும் என்கிற நிலை, வேலை முடிந்ததும் நேராக விழா நடக்கும் இடத்திற்குச் சென்றேன். என்னோடு வர இருந்த டொன் லீ சிவ தயாளன், அதிரை ஜமால் ஆகியோர் வேலையின் காரணமாக வர இயலவில்லை.


படம் அனுப்பிவைத்த புலவர் பாண்டித்துரைக்கு நன்றி!
நான் வந்து சேரும் போது விழா தொடங்கியிருந்தது, சிங்கப்பூரின் வெண்பா சிகரங்களான ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால்(தலைமையேற்றிருந்தார்) , பாத்தென்றல் முருகடியான் ஆகியோரின் உரை முடிவுற்றிருந்தது. அன்பிற்குரிய புதுமைத் தேனீ கவிஞர் மா.அன்பழகன் அவர்களும் உரையாற்றி அமர்ந்திருந்தார். திருமதி மலர்விழி இளங்கோவன் எழுதிய கவிதையைப் பாடலாக, தமிழ் வணக்கம் பாடிய காவியா பற்றி மற்றவர்கள் பேசும் போது குறிப்பிட்டார்கள். துளசி இளங்கோவன் நிகழ்ச்சியை நேர்த்தியாக நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்.

மார்கழிப் பூவைப் பற்றி அழகானப் பாடலை இசையில்லாமல் இசைந்து பாடினார் மருத்துவர் திருமதி உமா இராஜன் அவர்களின் உடன்பிறப்பு சோபா சங்கர், ஏ.ஆர் இரகுமான் இசையமைப்பில் மே மாதம் என்ற திரைப்படத்தில் பாடியவரும் இவரே.


இலக்கியத்தென்றல் கவிஞர் ந.வீ.விசயபாரதி அவர்கள் தென்றலாகத் தமிழ் மணம் வீசிக் கமழச் செய்தார். நூலாய்வு செய்ததைப் போல் ஓர் உணர்வு ஏற்பட்டது.

அடுத்து நூலாய்வு செய்த திரு ஜோதி மாணிக்கவாசகம் அவர்கள் கருவறைப் பூக்களில் உலகியல் என்றத் தலைப்பில் பொருளாதாரத்தைப் புட்டு புட்டு வைத்தார் என்பதை விட வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று எளிய ரசம் சொட்ட வட்டார வழக்கில் வகைப்படுத்திவிட்டு அமர்ந்தார். தொழில் வியாபாரம் செய்யும் சீனர்கள் சில தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு நம்மிடம் தமிழ் பேசுவதையும், நம்மவர்கள் தமிழ் ஆங்கிலம் இரண்டும் தெரிந்திருந்தும் நம்மிடத்தில் ஆங்கிலத்தில் பேசி அங்கலாய்ப்பதை வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். தனது உரையை கவிஞரின் கவிதையில் உள்ளிருத்திய உலகியல், பொருளாதாரம் சார்ந்த சிந்தனையைத் தொட்டுச் சிறப்பித்திருந்தார். வியாபாரத்துறையில் இருப்பவரை இந்தத் தலைப்பில் பேசத் தேர்ந்தெடுத்தது நன்றாக இருந்தது. இடையே அவர் தெரிவித்த குடியரசு தின வாழ்த்துகள் அன்றைய நாளில் அந்நியப்பட்டுப் போனதென்னவோ உண்மை.

அடுத்துப் பேசவந்த திருமதி விஜி ஜெகதீஷ், கருவறைப் பூக்களில் உறவியல் என்றத் தலைப்பில் உறவுகள், பந்தம், பாசம்,ஆணிவேர் போற்றவற்றை அக்குவேறு ஆணிவேராக அலசி நூலாய்வு செய்திருந்தார். இது தனது முதல் நூலாய்வு என்று பெருமைப்பட்டு பெருமைப் படுத்தினார். அதில் புலம் பெயர்தல் என்ற தலைப்பில் வந்த ஒரு கவிதையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நாற்று முதிர்ந்து



நாளாகி



நாடு மாற்றி நடவு செய்தாலும்



வேற்று மண் பதிந்து



விருப்புடனே வேர் பிடித்து



வியத்தகு மகசூல் தரும் ...



அவசிய வாழ்வினிலே



ஆணிவேர் தொலைத்த



அதிசய ரகம் நாங்கள்

புலம்பெயர் மக்கள் எந்த ரகம் என்பதை சுட்டாமல் சுட்டி இருக்கிறார் என்பதைவிட குட்டி இருக்கிறார் கவிஞர் என்றுதான் சொல்லவேண்டும். இன்னொரு கவிதை "ஆண்களின் ஆதங்கம்" என்ற தலைப்பில், இதில் ஆணாதிக்கம், பெண்ணியம் இரண்டையும் தராசிலிட்டு நிறுத்து கொடுத்திருக்கிறார். இதற்குமேல் விளக்கினால் அது விமர்சனமாகத் தெரியும். அதனால் இத்துடன் விட்டுவிட்டு நிகழ்ச்சிக்குச் செல்லலாம்.

இந்தக் கவிஞர் தனது கருவறைப் பூக்களைப் பிரசவிக்க ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தாலும் தனது மூன்றாவது குழந்தையான கருவறைப் பூக்களுக்கு விழா எடுத்துப் பிரசவம். மருத்துவர் திருமதி உமா இராஜன்(நமது ஈழத்துச் சொந்தம்) அவர்கள் நூலை வெளியிட வேதனையில்லாமல் வெளிக்கிட்டது கருவறைப் பூக்கள், பிறந்த குழந்தையின் மழலைச் சத்தம் விண்ணைப் பிளந்து அனைவரையும் ஒரு நிமிடம் குழந்தைகளாக்கிப் பார்த்தது.

அடுத்து, நூலை வெளியிட்ட மருத்துவர் திருமதி உமா இராஜன், தமது உரையில் கவிஞரிடம் உரையாடியதிலிருந்து கற்பனை செய்து வைத்திருந்த கவிஞரை நேரில் பார்க்கும் போது கற்பனை மெய்யானதை புனைவில்லாத  புதுக் கவிதையாகச் சொன்னது நன்றாக இருந்தது. பழக்க தோசத்தில் ஆங்கில வார்த்தைகள் வந்து விடுமோ என்று அச்சப் பட்டது, அதை வெளிப்படையாகச் சொல்லி வெட்கப்பட்டது, என்று சுவையாகச் சென்றது. அவர் தெரிவித்த வாழ்த்துகள் உள்ளக்கிடங்கையில் இருந்து வெளிப்பட்டு ஒப்பனையின்றி மிளிர்ந்தது.

அடுத்து ஏற்புரையாற்றிய கவிஞர் திருமதி மலர்விழி இளங்கோவன் யாருக்கு நன்றி சொல்வதென்று திக்குமுக்காடியதை கண்ணுற முடிந்தது. எனினும் நன்றி சொல்லி உங்களையெல்லாம் அந்நியப்படுத்த விரும்பவில்லை என்று தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டார். தனது உரையில் கவிஞர் திரு பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் தனது படைப்பு ஒன்றை  சிங்கைச்சுடர் மாத இதழில் வெளியிட்டதை நினைவு கூர்ந்தார். பின்னர் அண்ணன் திரு பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் மாதந்தோறும் நடத்தும் கடற்கரைச் சாலை கவிமாலையில் கலந்து கொண்டு கவிதைகள் படைத்ததையும், மரபுக் கவிதைப் போட்டியில் பங்கெடுத்ததையும், கவிஞர் ந.வீ.விசயபாரதி அவர்களிடம் இருந்து மரபை வரவாக்கிக் கொண்டதையும் நினைவு கூர்ந்தார். கவிஞர் புதுமைத் தேனீ மா. அன்பழகன் அவர்கள் பற்றியும் தெரிவித்து ஒட்டுமொத்த கவிஞர்களையும் ஒரே குடும்பமாக்கிக் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது கவியார்வத்தை ஊக்குவிக்கும் கணவர் திரு இளங்கோவன், மகன் மதன், மகள் துளசி ஆகியோர் பற்றிக் குறிப்பிடும் போது ஒவ்வொரு கவிதையையும் படித்துவிட்டு முதலில் விமர்சனம் செய்பவர் தனது கணவரே என்றார். இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கி  நெறிப்படுத்திய துளசி இளங்கோவன் கவிஞரது மகள் என்பது நிகழ்ச்சியின் பாதியில் தான் எனக்குத் தெரியும். வியப்பளிக்கும் வகையில் நேர்த்தியாக நிகழ்ச்சியைக் கொண்டு சென்றார் துளசி.


கருவறைப்பூக்கள் நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் திரு வைகோ அவர்கள்,

கவிதை என்பது பூக்களாக மட்டுமல்ல,
வாட்களாகவும்; தழுவும் தென்றலாக
மட்டுமல்ல, கிளர்ந்தெழும் புயலாகவும்
இருந்திட வேண்டும் என்பதை உணர்ந்தே
ஒவ்வொரு கவிதைகளையும்
வடித்திருக்கிறார் கவிஞர்.


கவிஞர் மலர்விழி இளங்கோவனின்
"கருவறைப் பூக்கள் காகிதப் பூக்களல்ல,
காவியப் பூக்கள்."

என்று முடித்திருக்கிறார்.


பேராசிரியர்  முனைவர் திரு.சுப.திண்ணப்பன், கவிமாமணி புதுமைத்தேனீ திரு. மா.அன்பழகன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு நா.ஆண்டியப்பன், கவிஞர் திரு.பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோரும் அணிந்துரை எழுதி சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

பின்பு நூல் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு தொடந்து நடந்து கொண்டிருந்தது.


இந்த நிகழ்வினூடாக தமிழ் இலக்கிய வட்டத்தின் உடன்பிறப்புகள் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. முனைவர் இரெத்தின வெங்கடேசன், கவிஞர் பாலு மணிமாறன்,எழுத்தாளர் மாதங்கி, புலவர் பாண்டித்துரை, கவிஞர் நூருல் அமீன், பட்டிமன்ற பேச்சாளர்கள் பெரி.சிவக்குமார், ஸ்டாலின் போஸ், சிங்.செயக்குமார் மற்றும் நண்பர்கள்.

இறுதியாகச் சிற்றுண்டிக்குப் பிறகு விழா இனிதே நிறைவடைந்தது.


நூல் : கருவறைப் பூக்கள் (கவிதைத் தொகுப்பு)


ஆசிரியர் : மலர்விழி இளங்கோவன்


வெளியீடு : மது பதிப்பகம்


விலை : ரூ 80/ S$12




நூல் விமர்சனத்தை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.



Wednesday, January 14, 2009

வன்னி மக்களை எண்ணி 3

வன்னி மக்களை எண்ணி 3

புலம் பெயர்ந்து வாழும் மக்கள்

தங்கள் புண்ணிய பூமிக்குப்

போக முடியாத நிலையில்

நிலம் பெயர்ந்த மக்களை நினைத்து

நிம்மதி இழந்து தவிக்கும்

தாய்த் தமிழகத்து

ஆற்றாமைத் தமிழன் விடும்

கண்ணீரின் வெப்பம் சூடாகிக்

கனன்று கொண்டிருக்கிறது.

வன்னி மக்களை எண்ணி 2

வன்னி மக்களை எண்ணி 2

வெளிக்கிட்ட காலம் எல்லாம்

மலையேறிப் போய் விட்டது

வெளியே கிடப்பவர்களுக்கு

இழந்த வீடு கிடைக்க வேண்டுமே

வெளிக்கிட.

வன்னி மக்களை எண்ணி

வன்னி மக்களை எண்ணி

எல்லோருக்கும் எப்போவாவது சுற்றுலா

சுற்றிப் பார்த்து மகிழ்கிறார்கள்

எங்களுக்குத் தினமும் சுற்றுலா

நாங்கள் சுற்றுவது மட்டும்தான்

எதையும் பார்த்தது கிடையாது

எங்கட கண் மணிகளைத் தான்

விழி நீர் மறைத்து விட்டதே.

Monday, January 12, 2009

அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்!

அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்!

போகியில் தீயன போகி
யோகமும் போகமும் பொங்க

இல்லம் புதுப்பிப்பு
இரவல் பொருள் திருப்பி ஒப்படைப்பு

வசதிக்காரர் வீட்டில்
வண்ண வண்ண சாயங்களும்
வகை வகையான பொருட்களும்

நடுத்தர குடும்பம்
நமக்கு வெள்ளை மட்டும் தான்
நகை போதும் புன்னகை

ஏழை மக்கள்
ஏங்கி மொழுகினார் சாணத்தால்
ஏற்றம் வரும் என நம்பி

மதுக்கூர் சந்தையிலே
மஞ்சள் கொத்து,
வாழைத்தார்கள்
வகைவகையாய்
செங்கரும்பு வாங்கி
செழிக்க வைப்போம் -நம்
செவ்வேர் விவசாயியை

வறுத்தெடுக்க வாளை மீனும்
வகை வகையாய் காய்கறியும்

வண்ண வண்ண கொம்புச்சாயம்
வசீகரிக்கும் நெத்திசுட்டி

சின்ன சின்ன இதழ் தொடுத்த
சிங்கார மாட்டு மாலை

தேடித் தேடி வாங்கி வந்து
தேக்கி வைத்த நன்றிதனை
தெவிட்டத் தெவிட்ட தந்திடுவோம்

அதிகாலை பொங்கலன்று விழித்து
வீட்டை சுத்தம் செய்து கழுவி
விதவிதமாய் கோலங்களால் தழுவி
மங்கையர்கள் மகிழ்ந்து மகிழ்ந்து உலவி
மற்றவர்கள் இல்லங்களில் போய்
மகிழ்ந்து மகிழ்ந்து
கோலங்களைப் பார்ப்பர்
கூடிப் பேசி குதூகளிப்பர்.

சரியான நேரத்தில்
சரமாக கோடு திறந்து
தளமேடை அமைத்து
சாணத்திலே அருகம்புல் பிள்ளையார்
கிழக்குப்பக்கம் பார்க்கவைத்து
வாழைப்பழ சீப்பும், செங்கரும்பும், மஞ்சள் கொத்தும்
வழமை போல் சர்க்கரைப்பொங்கல் வெற்றுப்பொங்கல்
பொங்கி வரும் நேரந்தனில்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலே பொலிக!!
பொங்கலே பொலிக!! -என்று
கூவிக் கூவிக் குதூகளிப்போம்

பொங்கிய பொங்கலுக்கு
மஞ்சள் கொத்தால்
மாலையிட்டு
ஞாயிறு தொழுது குடும்பத்தோடு
நன்றிக்கடன் தீர்த்துவைப்போம்.

ஆண்டிற்கு ஒருமுறை
அறுதியிட்டு கூறாவிட்டால்
அதனையும் மறந்து விடுவோமோ?

மறுநாள் மாட்டுப்பொங்கல்
மகிழ்வுடனே எதிர்பார்த்து
வருடமெலாம் திங்கும் வைக்கோலுக்கு
வசதியாய் விடைகொடுக்க
வந்தது பொங்கலென்று
வாரி வாரி அறுத்திடுவோம்
வயல்களிலே வளர்ந்த புல்லை

காலையிலிருந்து கால்நடைகளிடம்
கனிவுடனே நடந்துகொள்வோம்
களத்துமேட்டிலே நற்ப் புல்
கண்ட இடம் மேய்த்து
கானோடை ஓடை செவந்தான்,
சாமந்தி பிச்சினி ஒடப்பா
திரிகுளம் வீரையன்குளம் வண்ணார்குளம்
தண்ணீர் காட்டி குளிப்பாட்டி
வீட்டுக்கு ஓட்டிவரும் முன்னே
செங்கல் மாவில் கோலமிட்டு
மங்கையர்கள்
மகிழ்வுடனே காத்திருப்பார் வரவேற்க
குங்குமமும் இட்டிடுவார்
கோலமிடும் பொற்ச்செல்வி
சங்கதனைக் கட்டிடுவார்
சரஞ்சரமாய் வண்ண மாலையும் இட்டு
செதுக்கப்பட்ட கூரிய
கொம்புக்கு வண்ணம் தீட்டி

பெரியவன் வைரவன் வனத்தில் பெற்ற
ஈச்சை மட்டை கசங்கை
மெல்லிய சுத்தியால் இழைத்து
மாவிலை வேப்பிலை பெரண்டை
ஆவாரம்பூ கன்னிப்பூ நெல்லிக்கொத்து
மாலையாய் தொடுத்து ஒற்றைப்படையில்
மகிழ்வுடனே மாட்டுக்கு மாலையிட்டு

பொங்கிய பொங்கலை ஊட்ட
தண்ணீர் நல்லெண்ணெய் அரப்பிட்டு
தண்ணீரிட்டு கழுவி
பொங்கலூட்டி வாய் கழுவி
தாரை தப்பட்டையோடு
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலே பொலிக!
பொங்கலே பொலிக!! -என்று
போற்றிடுவோம் மாடுகளை என்றும்...

திட்டியதை சுற்றியும் போட்டு
மாட்டை தாண்டவிட்டு
கட்டிடுவோம் புது அச்சில்
கொட்டிடுவோம் புல்லதனை
தெவிட்டத் தெவிட்ட

பசியறியா விரதம் இன்று
விருந்தினரை உபசரித்து -பின்
பசியாறி விருந்தோம்பல் போற்றிடுவோம்

கண்ணுப் பொங்கலை
காணும்பொங்கலாய்
கன்னிப் பொங்கலாய்
கவின்மிகு கலைநிகழ்ச்சிகளும்
களித்திடுவோம் பிள்ளைகள் விளையாடக் கண்டு
காத்திடுவோம் தமிழர் பண்பாடு என்றும்...


அன்புடன் ஜோதிபாரதி


நன்றி
வார்ப்பு
பதிவுகள்
திண்ணை
கீற்று

Friday, November 21, 2008

சாதி மத வெறியர்களுக்கு இங்கே சுளுக்கு எடுக்கப்படும்!

ஆயிரத்தில் ஒருவன்



எல்லா சாதி மதத்தினரின்

மானத்தையும்

கரும்புள்ளி செம்புள்ளி குத்தி

கழுதைமேல் ஏற்றி

கஞ்சி குடிக்கவைத்து

துவைத்து

சுளுக்கெடுத்து

அழுக்கெடுத்து

காயவைத்து

சூடும் வைத்து

கை கால்களை

மடித்துக் கட்டிப்போட்ட

சலவைத் தொழிலாளி

Friday, April 18, 2008

அம்மியின் விழுப்புண்

அம்மியின் விழுப்புண்


வாங்கிக் கட்டிக் கொண்டது

வரிசையாக அடி

இடியாக.

விழுகின்ற அடியெல்லாம்

விழுப்புண்ணானது.

நொடி இடைவெளி கூட இல்லை

நொந்துகொள்ள.

உளியால் கொத்தப்பட்ட அம்மி

வலியால் துடிக்கவில்லை.

தாங்கிக்கொண்டது

தனது வேலைக்குதவுமென்று.

அறியாமைச் செதில்களும்

புரியாமைத் தூசியும் பறந்து

குப்பைகளை மாசாக்கின.

பண்பட்டது அம்மி நன்றாக

புண் பட்டாலும்.

வழுக்காமல் அரைத்து

உரைத்தெடுத்தது

உறைக்கும் மிளகாயைக் கூட...!

குன்றாத

சுவையோடு இருந்தது

குழம்பு...!


அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Thursday, April 17, 2008

புகையாத புகை புகைந்தது பின்னால்...!



புகையாத புகை புகைந்தது பின்னால்...!


அவன் புகைப்பிடிக்கும்

காலங்களில்

புகையாதது,

புகைந்தது

ஊரெல்லாம்,

அவன் மருத்துவ சோதனைக்கு

நடையாய் நடந்தபோது,

புற்றுநோயாய்

இருக்குமோ என்று...?



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Wednesday, April 16, 2008

தொப்பை...!

ஒளித்து வைத்த

ஒய்யாரம்

வெளியே வந்து

வெட்கத்துடன்,

தடித்து நின்றது

தயக்கமில்லாமல்...!



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Thursday, April 10, 2008

தேசிய நீரோட்டம் எங்கே இருக்கிறது?

தேசிய நீரோட்டம்
எங்கே இருக்கிறது?

எங்கே இருக்கிறது?
தேசிய நீரோட்டம்

நீரோடவில்லை
அணைகள்
போட்டுக் கொண்டதால்

வரிந்து கட்டிக் கொண்டு
நிற்கிறது தேசியம்
வாயளவில்...!

தேசியக் குட்டை மட்டும்
நாறிக்கொண்டிருக்கிறது
கிடை தண்ணீரால்

ஊறிக் கொண்டிருக்கின்றன
அதனுள் மட்டைகள்

பல வண்ணமாய்ப்
பின்னப் படுகின்றன.
அந்த மட்டைகள்

நிரை(றை)ச்சல்
பிடிக்கின்றன
ஒழுகும் கீற்றுக் கொட்டகை
வீட்டு வேலிக்கு

பாவம் அவன்
ஒழுகும் வீட்டில்
நனைந்துகொண்டு
உறங்குகிறான்...!



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Wednesday, April 9, 2008

பொதி சுமந்த கழுதை...!

பொதி சுமந்த கழுதை...!

பொறுப்பைத் தட்டிக்
கழிக்கவில்லை

பொறுமையின் எல்லை
காணவில்லை

தயக்கமும்
தங்கியதில்லை

தறிகெட்டு
ஓடியதுமில்லை

எல்லோருக்கும் ஏளனம்
எனது நடையைப் பார்த்து

எல்லோருக்கும் ஒவ்வாமை
எனது குரல் கேட்டால்

ஏற்றிக் கொள்கிறேன்
ஏற்றம் மட்டுமே வாழ்க்கை என்று

கலங்கியதே இல்லை
கவலைப் பட்டாலும்

எவ்வளவு ஏற்றினாலும்
சுமக்கிறேன்

நல்ல பெயர் மட்டும்
கிடைத்ததே இல்லை

சுமந்து கொண்டே
இருக்கிறேன்

என்னைப் பிடிக்காதவர்களின்
அழுக்குகளையும் தான்.



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Sunday, April 6, 2008

மணம் வீசிய காகிதப் பூக்கள்!

மணம் வீசிய காகிதப் பூக்கள்!


எனது காகிதம் கூட

கரைந்தது

சாயம் மட்டும்

போகவில்லை

நான் வரைந்த

பூக்கள்

மணம் வீசியது

எனது கவிதைகள்...!



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி

Friday, April 4, 2008

தூக்கணாங்குருவி

கோதி உரித்த நார்

கொத்திக்கொண்டு வந்தேன்.


ஒன்று ஒன்றாய்ச் சேர்த்து

ஒட்டி ஒட்டிப் பின்னி

ஒப்பேத்தி விட்டேன்.


நாரிலையில் கூடு

நாறிடாத வீடு.


மயிரிழையில் வாழ்வு

மகிழ்ச்சியான வாழ்வு


நாசியினை

நங்கூரமிட்ட

நயமான வீடு.


தொங்குகிற வீடு

தோட்டங்களோ கீழே.


மங்காத வெளிச்சம்

மாறி மாறி அடிக்கும்.


கதவில்லா நிலை

கவலை கொண்டதில்லை.


சன்னல்களோ இல்லை

சகித்துக் கொள்ள வேணும்.


பின்னல்களும் உண்டு

பேதலித்ததில்லை.


காற்று வந்தால் ஆடும்

களிப்புடனே ஊஞ்சல்.


குஞ்சுகளை ஏந்தி

குலவைகளும் இட்டு.


நெஞ்சுரமே கொண்டு

நேர்த்தியான வாழ்வு.


வேடர்களைக் கண்டு

வெகுண்டெழுந்ததில்லை.


சுற்றங்களும் உண்டு

சூழ்ச்சிகளோ இல்லை.


பற்றியதே வாழ்க்கை

பசுமையான வாழ்க்கை.



அத்திவெட்டி ஜோதிபாரதி

Thursday, April 3, 2008

என்னை மரக்க வைத்த மறத்தமிழன்!

பழகியதால்

நீங்கள் தமிழரா என்று கேட்டேன்.

நான் தமிழன் என்று சொன்னார்.


மகிழ்ச்சியுடன்

தமிழகத்தில் எந்தப் பகுதி என்று கேட்டேன்.


தாத்தா பூனாவைச் சேர்ந்த மராத்திக்காரர்

பாட்டி இலங்கையைச் சேர்ந்தவர் என்றார்.


மகிழ்ச்சியுடன்

உங்கள் பாட்டி நம் ஈழத்தமிழரா என்று கேட்டேன்.


சிரித்துக்கொண்டே சிங்களவர் என்றார்

மலைத்து நின்றேன்.


அப்பா தெலுங்குக்காரர், அம்மா மலையாளி

நான் தமிழன் என்றான்

அந்த மறத்தமிழன்.

நான் மரத்துப் போய் நின்றேன்...!



அத்திவெட்டி ஜோதிபாரதி

Friday, March 21, 2008

நெற்றித் திலகம்

அரைப் புள்ளிகளை

அணிந்து அணிந்து

அவமானமாய்.


மூச்சடக்கி

முடிக்காமல்

முற்று பெறாத

முற்றிய புள்ளியாய்

நெற்றித் திலகமாய்

நெகிழ்கிறேன்.



அத்திவெட்டி ஜோதிபாரதி

அரிக்கன் கரியடித்துவிட்டது

அழகான அரிக்கன் விளக்கு

அளவான வெளிச்சம்

வெளிச்சம் பத்தவில்லை என்று

வெகுண்டு தூண்டியது மனம்

கரியடித்துவிட்டது

துடைத்து விட்டேன்

தூண்ட முடியவில்லை

எண்ணெய் தீர்ந்துவிட்டது



அத்திவெட்டி ஜோதிபாரதி

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை