
”எம்.ஜி.ஆர் - நடிகர் முதல்வரானது எப்படி?” அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த, எம்.ஜி.ஆர் பற்றிய அருமையான தகவல்கள் அடங்கிய நூல் என்று சொல்லலாம். இந்த நூலை வாசித்து நிறைவு செய்கையில் நூலாசிரியரின் உழைப்பு, எம்.ஜி.ஆர் பற்றிய தேடல் அப்பட்டமாகத் தெரிகிறது. நடிகராக இருந்து, பின் அரசியலுக்கு வருவது, தமிழக முதல்வர் ஆவது மிகவும் எளிது என்று நினைக்கும் திரு.விஜயகாந்த்,சரத்குமார்,கார்த்திக் போன்றவர்கள் இந்த நூலைப் படித்திருப்பார்களேயானால் கண்டிப்பாக அவர்களுக்கு முதல்வர் பதவியின் மீது ஆசை வந்திருக்காது, தங்களை சுய விமர்சனம் செய்துகொண்டு ஆயத்தப் படுத்திக்கொண்டு வந்திருப்பார்கள் ஜெயலலிதா முதல்வராக வந்தது, எம்.ஜி.ஆர் கட்டி வைத்த அதிமுக கட்சி அமைப்பு எனும் கோட்டை வழியாக. அதில் அரசியாக வந்து அமர்ந்து கொண்டார் என்று சொல்லலாம். அதுவே அவரை முதல்வர் பதவிக்கு அழைத்துச் சென்றது.
எம்.ஜி.ஆர் அவர்கள் தன் வரலாறு கூறும் பொருட்டு 1970-72 -ல் தன்னைப் பற்றி எழுதினார். அது எந்தளவுக்கு அவரது வாழ்க்கை வரலாற்றை பேசும் என்பதைவிட அதற்கு பின்பே அவர் தனது வாழ்வில் மிகப்பெரிய திருப்பங்களை எதிர்கொண்டார். உலகிலேயே முதன்முதலில் நடிகர் அரசியலில் பங்கெடுத்து அரசு பதவி வகித்தது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1966-ல் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ரொனால்ட் ரீகன் அவர்கள் மட்டும் தான். அவருக்குப் பின் இந்தியாவில், தமிழ் நாட்டில் 1977-ல் முதல்வராக திரு.எம்.ஜி.ஆர். இவர்கள் இருவருக்கும் இன்னொரு ஒற்றுமை இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள். ரீகன் ஒரு பட்டதாரி, எம்.ஜி.ஆரோ மூன்றாம் வகுப்பு வரை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணா 1949 -ல் திராவிட முன்னேற்றக் கழகம் கண்டு, 1969-ல் தமிழக முதல்வரானார், அதற்கு 18 ஆண்டுகள் ஆனது. ஆனால் 1972-ல் கட்சி தொடங்கி(அதிமுக பின்னர் அஇஅதிமுக என்று மாற்றிக்கொண்டார்) ஐந்தே ஆண்டுகளில் தமிழக முதவரானார் என்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்று என்றால் அது மிகையாகாது.
இந்த நூலில், நூலாசிரியர் எம்.ஜி.ஆர் மலையாளி என்று நிரூபிக்க பல்வேறு ஆதாரங்களைத் திரட்டித் தருகிறார். அதைவிடவும் ஒரு தமிழரல்லாதவர் தமிழகத்தின் முதல்வராக கட்சி தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் வரமுடிந்ததை வியப்புடன் பகிர்கிறார். அதுமட்டுமல்ல அவர் தமிழ் நாட்டில் பிறந்தவருமல்லர். கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில், இலங்கை கண்டியில் பிறந்து, தமிழகத்தில் கும்பகோணத்தில் குழந்தைப் பருவத்தை கொஞ்ச காலம் கழித்து, பின் வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்புடன் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பிதார். பின் திரைப்பட நடிகராக இருந்து எப்படி முதல்வராக முடிந்தது என்பதை நேர்மறை, எதிர்மறை விமர்சனத்துடன் இந்நூல் சிறப்பாக அலசுகிறது.
தற்போதைய கேரள மாநிலத்தில் ஒட்டப்பாலம் அருகில் உள்ள நல்லேப்பள்ளி என்னும் ஊரைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலமேனன். கேரளத்தில் பாலக்காட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடவனூர்(இங்குதான் மருதூர் உள்ளது) தாய் சத்தியபாமாவின் ஊர். கோபாலமேனனின் தாயார் பெயர் மேனக்கத் லெட்சுமி. மேனக்கத் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்பதைத் தான் எம்.ஜி.ஆர் என்று வைத்துக்கொண்டதாக பதிவு செய்கிறார். மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்று பலரும் குறிப்பிடுவதையும் இங்கு நாம் பதிவு செய்வது அவசியமாகிறது. எம்.ஜி.ஆரின் தாய் தந்தையர்கள் மலையாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களின் முன்னோர்கள் கொங்கு நாட்டைச் சேர்ந்த வேளாளர்கள் என்று புலவர் செ.இராசு அவர்கள் எழுதிய செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் - ஒரு வரலாற்று ஆய்வு எனும் நூலில் நிரூபிக்க முயன்றிருப்பதாகத் தெரிவிக்கிறார்.
எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப்பழகிய வித்வான் வே.லட்சுமணன் எம்.ஜி.ஆர் பற்றி எழுதும்போது எம்.ஜி.ஆருடைய தந்தை கோபாலமேனன் அரூர்,திருச்சூர்,கரூர்,எர்ணாகுளம் முதலான இடங்களில் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றியவர் அநீதிக்கு துணைபோக விரும்பாமால் அந்தப் பதவியை துறந்தவர் என்றும், பின்னர் இலங்கைக்குச் சென்று கண்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பிரின்சிபாலாகப் பணியாற்றியவர் என்றும் அப்போதுதான் 1917 ஆம் ஆண்டு சனவரி 17 அன்று எம்.ஜி.ஆர் பிறந்தார் என்றும் குறிப்பிடுகிறார். கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு ஐந்து குழந்தைகள். குழந்தைகளுடன் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் 1920-ல் கோபாலமேனன் திடீரென்று இறந்து விடுகிறார். தொடர்ந்து விசக்காய்ச்சலால் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் மரித்து விடுகிறார்கள். இப்போது சத்தியபாமாவுக்கு எஞ்சியிருந்த குழந்தைகள் எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் தான்.
தனது இரு குழந்தைகளுக்காக இவ்வளவு வேதனையையும் தாங்கிக்கொண்ட சத்தியபாமா கண்டியிலிருந்து தமிழகத்தின் கும்பகோணத்திற்கு வருகிறார். தூரத்து உறவினரான திரு வேலு நாயரின் ஆதரவில் வாழத் தொடங்குகிறது எம்.ஜி.ஆரின் குடும்பம். கும்பகோணம் நகராட்சி யானையடி தொடக்கப்பள்ளியில் 1922-ம் ஆண்டு சேர்க்கப்படுகிறார் எம்.ஜி.ஆர். பெயர் ஜி.ராமச்சந்திரன் என்றும், தந்தை பெயர் கோபாலமேனன் என்றும், பிறந்த தேதியாக 25-05-1916 என்றும் வகுப்பு மலையாளி என்றும் பள்ளியில் பதிவு செய்கிறார்கள். வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்லும் வேளையில் 1925 - ஆண்டு பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறார்.
பின்னணி பாடும் கும்பகோணம் நாராயணன் நாயர் உதவியுடன் ஒரு நாடகக் கம்பெனியில் குழந்தைத் தொழிலாளர்களாக எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சேர்த்துவிடப்படுகிறார்கள். தொடர்ந்து நாடகக் கம்பெனியில் இருவரும் வேலை செய்கிறார்கள்
1939-ல் எம்.ஜி.ஆர் பார்கவி என்னும் பெண்ணை மணமுடித்துக் கொள்கிறார். இவரும் மலையாளியே ஆவார். எம்.ஜி.ஆரின் தாயார் இவரை தங்கமணி என்று அன்புடன் அழைத்தார். தங்கமணியின் தாயார் லட்சுமி குட்டி, தந்தை தமிழ் நாட்டுக்காரரான விசுவநாத அய்யர். 1942-ல் தங்கமணி திடீரென்று காலமாகிவிடுகிறார். இதே ஆண்டில் எம்.ஜி.ஆர், கடுங்க நாயர் என்பவரின் மகளான சதானந்தவதி என்ற பெண்ணை மணக்கிறார். இவரும் மலையாளியே பாலக்காட்டிலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ள குழல் மன்னம் என்ற இடத்தில் ஏரகாட் குடும்பத்தில் பெண் கிடைத்தது என்று குறிப்பிடுகிறார் எஸ்.விஜயன்.
ராஜமுக்தி திரைப்படம் 1948-ல் வெளிவந்தது, இந்த படத்தின படப்பிடிப்பில் தான் எம்.ஜி.ஆருக்கும், நடிகை வி.என்.ஜானகிக்கும் காதல் ஏற்பட்டதாக நடிகை சி.டி.ராஜகாந்தம் அறியத்தருகிறார். மிகப்பெரிய போராட்டத்தின் இறுதியில் வி.என்.ஜானகியை கரம் பிடிக்கிறார் எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகியுடைய கார்டியனாக இருந்தவரோடு எம்.ஜி.ஆர் - ஜானகி போராடியபோது இவர்களுக்கு ஆதரவாக ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் நீதிமன்றக் கூண்டில் ஏறி சாட்சி சொன்னாராம். காச நோய் பீடித்திருந்த தனது மனைவி சதானந்தவதியின் அனுமதியோடு 1957-ம் ஆண்டு வி.என்.ஜானகியை பதிவுத் திருமணம் செய்துகொண்டார் எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகியின் தாயினுடைய ஊர் பாலக்காட்டிற்கு அருகில் உள்ள வைக்கம். இவர் பிரபல கர்நாடகப் பாடல் ஆசிரியர் பாபநாசம் தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள். ஆக இவரும் பிறப்பால் மலையாளியே என்று எம்.ஜி.ஆரின் உதவியாளர் எம்.ஜி.ஆர் முத்து கூறியிருக்கிறார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் திருவனந்தபுரத்துக்கு பயணிக்கும் போது வழி நெடுகிலும் எழுதப்பட்டிருந்த மொழி புரியவில்லை என்றும் அது மலையாளத்தில் எழுதப்பட்டிருந்ததாகவும் எம்.ஜி.ஆரே குறிப்பிட்டிருக்கிறார்.
அவருக்கு மலையாள மொழி தெரியவில்லை என்று அவரது நண்பர்கள் கேலி செய்ததாகவும் குறிப்பிடுகிறார். அவர்களுக்கு தான் தமிழ்ப் பள்ளியில் தானே படித்தேன், மலையாளம் எங்கு போய் கற்பேன் என்று பதிலுரைத்திருக்கிறார். இருப்பினும் அவருக்கு மலையாள மொழி பேசத்தெரிந்திருக்கிறது. 1953-ல் ஜெனோவா என்னும் திரைப்படம் தமிழ்,மலையாளம் இரண்டிலும் வெளிவந்திருக்கிறது. இரண்டிலும் எம்.ஜி.ஆரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். அந்தந்த மொழிகளில் தானே டப்பிங் பேசியிருக்கிறார். இது பற்றி எம்.ஜி.ஆர் குறிப்பிடுகையில் “ நான் மலையாளத்தில் நடித்த கதாநாயகன் வேடத்தில் என்னால் பேசப்பட்டிருந்த மலையாள மொழி உரையாடல்கள் ஒரு மலையாள நடிகரால் டப்பிங் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன்”. இதிலிருந்து நமக்குத் தெரிவது எம்.ஜி.ஆர் தனது தாய் மொழியான மலையாளத்தில் பேசி ஒரு படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் பேசிய மலையாளம் தூய மலையாள ஓசையுடன் கூடியதாக இல்லை. தமிழ் மொழியை ஒத்த ஓசையுடன் இருக்கிறது என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரே எம்.ஜி.ஆரிடம் சொல்லி இருக்கிறார்.
எம்.ஜி.ஆர் வீட்டில் என்ன மொழியில் பேசியிருப்பார்? பெரும்ப்பாலானவர்களுக்கு இந்த கேள்வி இயற்கையாகவே எழும். அவரது தாய்மொழியாக எதை நினைத்தார் என்பதை தனது மனைவி சதானந்தவதியுடன் நடந்த உரையாடலை வைத்து எம்.ஜி.ஆர் இப்படி கூறுகிறார்.
”அவள் சொன்னாள்: ‘என்னைப் பொறுத்தவரை ஆங்கிலமோ, தமிழோ, மலையாள மொழியைத் தவிர வேறு எதுவானாலும், அது எவ்வளவு பெரிய இலக்கியங்களைக் கொண்டதானாலும் எனக்கு அது தொட்டியில் ஊற்றிய தண்ணீர்தான். ஆனால் எனது தாய் மொழி ஊற்றெடுக்கும் நீர் ஊற்றாகும்.’
நான் அவளிடம் திருப்பிக் கேட்டேன் : ‘எனக்கும் தாய்மொழி மலையாளம் தானே. ஆனால் எனக்கு மட்டும் ஏன் தொட்டித் தண்ணீராகத் தமிழ் இல்லை, ஊற்று நீராகவே இருக்கிறது?’
அவளிடமிருந்து பளிச்சென பதில் வந்தது : ‘ நீங்கள் முதன்முதலில் படித்ததோ எழுதியதோ, உங்களைச் சுற்றிப் பேசப்பட்டதோ எல்லாமே தமிழ்தானே. நான் அப்படியல்லவே!”
அவளிடம் சொன்னேன் : “இன்று முதல் உன்னிடம் தமிழில் தான் பேசப்போகிறேன்”.
நான் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாகச் சொன்னேனோ அதற்கு நேர்மாறாக அமைதியாகச் சொன்னாள் : “ நானும் உங்களிடம் தமிழில் தான் பேசுவேன்”.
இவ்வுரையாடல் மூலம் எம்.ஜி.ஆர் மலையாளி என்பதையும் தனது தாய்மொழி மலையாளம் என்பதையும் உணர்ந்தே இருந்தார் என்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்துகிறார். இப்படி பிறப்பால் மலையாளியாக இருந்தவர்தான் தமிழகத்திற்கு முதல்வரானர் என்று நூலாசிரியர் குறிப்பிடுவது ஆதங்கமா அல்லது இயல்பா என்று இந்த இடத்தில் புரிந்துகொள்ள இயலவில்லை.
இப்படியெல்லாம் சிரத்தை எடுத்து எம்.ஜி.ஆரை மலையாளியாக நிரூபிக்க முயற்சி எடுத்த நூலாசிரியர் இன்னும் சில சுவையான தகவல்களை தரத் தவரவில்லை.
திரைப்படம் ஒன்றில் எம்.ஜி.ஆரை நோக்கி பாடும் கதாநாயகி,
”சேரனுக்கு உறவோ? செந்தமிழர் நிலவோ?” என்று பாடுவார்.
இதற்கு நூலாசிரியர் தரும் பதில் “இரண்டும் தான்” பிறப்பால் மலையாளியான எம்.ஜி.ஆர் பற்றி அவர் திமுகவில் இருந்து விலக்கப்படும் வரை பிரச்சனையாக தமிழகத்தில் எழுப்பப்படவில்லை. திராவிடம் என்று போர் முரசு கொட்டியவர்கள் எம்.ஜி.ஆர் மலையாளி என்று பரப்புரை செய்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது பொருட்படுத்தவில்லை என்பதையும் எம்.ஜி.ஆர் செந்தமிழர் நிலவுதான் என்பதையும் வெளிப்படுத்தியதை விரிவாக எழுதுகிறார். எனினும் சேரனும் தமிழர் தான், அவன் சோழனுக்கு உறவுமுறைதான். சேரன்,சோழன் மற்றும் பாண்டியர்களும் நம் தமிழர்கள் தான் என்கிற நல்லெண்ணத்துடன் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.
தொடரும்...
அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.
எம்.ஜி.ஆர் - நடிகர் முதல்வரானது எப்படி?
நூலாசிரியர்: அருணன்
வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்
12 கருத்துக்கள்:
மக்கள் திலகத்தின் வாழ்க்கை சுவாரஸ்யங்களின் குவியல்
Nalla alasal.Book price? Trichy il kidaikuma?
பகிர்விற்க்கு நன்றி!
நல்லா அலசி இருக்கீங்க அண்ணே...புத்தகம் இங்க கிடைக்குமா???
இடுகை தலைப்பை பார்த்ததும்....இயக்குனர் சேரனுக்கு உறவோன்னு நினைச்சிட்டு வந்தேன்:))
//இடுகை தலைப்பை பார்த்ததும்....இயக்குனர் சேரனுக்கு உறவோன்னு நினைச்சிட்டு வந்தேன்:))//
சேரனுக்கே உறவானால்; இயக்குனர் சேரனுக்கும் உறவுதானே!
பல சுவாரசியமான தகவல்கள் நிரம்பிய பதிவு.
ஜோ/Joe said...
மக்கள் திலகத்தின் வாழ்க்கை சுவாரஸ்யங்களின் குவியல்
//
சரியாகச் சொன்னீர்கள். பல திருப்பங்களைக் கொண்டது. கடின உழைப்பும் அவருக்கு ஒரு மூலதனம்...
ஜோ/Joe said...
மக்கள் திலகத்தின் வாழ்க்கை சுவாரஸ்யங்களின் குவியல்
//
சரியாகச் சொன்னீர்கள். பல திருப்பங்களைக் கொண்டது. கடின உழைப்பும் அவருக்கு ஒரு மூலதனம்...
கிருஷ்குமார் said...
Nalla alasal.Book price? Trichy il kidaikuma?
//
கிடைக்கலாம்.
நூலாசிரியர் அருணன் மதுரையைச் சேர்ந்தவர்.
நூலின் முதல் பதிப்பு இது 2006 ஆகஸ்ட்.
நூலின் விலையாக அப்போது ரூ100 போட்டிருக்கிறார்கள்.
நன்றி கிருஷ்குமார்!
கிருஷ்குமார் said...
Nalla alasal.Book price? Trichy il kidaikuma?
//
கிடைக்கலாம்.
நூலாசிரியர் அருணன் மதுரையைச் சேர்ந்தவர்.
நூலின் முதல் பதிப்பு இது 2006 ஆகஸ்ட்.
நூலின் விலையாக அப்போது ரூ100 போட்டிருக்கிறார்கள்.
நன்றி கிருஷ்குமார்!
வால்பையன் said...
பகிர்விற்க்கு நன்றி!
//
நன்றி வால்பையன்!
வால்பையன் said...
பகிர்விற்க்கு நன்றி!
//
நன்றி வால்பையன்!
நிஜமா நல்லவன் said...
நல்லா அலசி இருக்கீங்க அண்ணே...புத்தகம் இங்க கிடைக்குமா???
//
பாரதி,
கவ்காங் நூலகத்தில் இருந்து எடுத்து படித்தேன். கிடைக்குமா என்பது தெரியவில்லை. தேக்கா செல்லும் போது புத்தகக் கடைகளில் கேட்டுப்பார்க்கிறேன்.
நிஜமா நல்லவன் said...
நல்லா அலசி இருக்கீங்க அண்ணே...புத்தகம் இங்க கிடைக்குமா???
//
பாரதி,
கவ்காங் நூலகத்தில் இருந்து எடுத்து படித்தேன். கிடைக்குமா என்பது தெரியவில்லை. தேக்கா செல்லும் போது புத்தகக் கடைகளில் கேட்டுப்பார்க்கிறேன்.
நிஜமா நல்லவன் said...
இடுகை தலைப்பை பார்த்ததும்....இயக்குனர் சேரனுக்கு உறவோன்னு நினைச்சிட்டு வந்தேன்:))
//
கண்டிப்பாக இயக்குநர் சேரனுக்கும் உறவுதான்!
யோகன் ஐயா சொல்வதுபோல்!
இரண்டு பேருமே இயக்குநர்கள் தான்
நிஜமா நல்லவன் said...
இடுகை தலைப்பை பார்த்ததும்....இயக்குனர் சேரனுக்கு உறவோன்னு நினைச்சிட்டு வந்தேன்:))
//
கண்டிப்பாக இயக்குநர் சேரனுக்கும் உறவுதான்!
யோகன் ஐயா சொல்வதுபோல்!
இரண்டு பேருமே இயக்குநர்கள் தான்
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//இடுகை தலைப்பை பார்த்ததும்....இயக்குனர் சேரனுக்கு உறவோன்னு நினைச்சிட்டு வந்தேன்:))//
சேரனுக்கே உறவானால்; இயக்குனர் சேரனுக்கும் உறவுதானே!
பல சுவாரசியமான தகவல்கள் நிரம்பிய பதிவு.
தாங்கள் சொல்வது சரிதான் யோகன் ஐயா!
நன்றி!
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//இடுகை தலைப்பை பார்த்ததும்....இயக்குனர் சேரனுக்கு உறவோன்னு நினைச்சிட்டு வந்தேன்:))//
சேரனுக்கே உறவானால்; இயக்குனர் சேரனுக்கும் உறவுதானே!
பல சுவாரசியமான தகவல்கள் நிரம்பிய பதிவு.
தாங்கள் சொல்வது சரிதான் யோகன் ஐயா!
நன்றி!
Post a Comment