Monday, December 24, 2007

தொலைத்தேன்

தொலைத்தேன்

தூக்கம் தொலைத்தேன்

துவண்டு தொலைத்தேன்

ஆக்கம் தொலைத்தேன்

அழுது தொலைத்தேன்

மகனை தொலைத்தேன்

மகிழ்ந்து தொலைத்தேன்

வீணாய் தொலைத்தேன்

வீங்கித் தொலைத்தேன்

மயங்கித் தொலைத்தேன்

மாறித் தொலைத்தேன்

நேரம் தொலைத்தேன்

நெகிழ்ந்து தொலைத்தேன்

நாணம் தொலைத்தேன்

நகைத்துத் தொலைத்தேன்

படிப்பைத் தொலைத்தேன்

பயந்து தொலைத்தேன்

உணவைத் தொலைத்தேன்

ஊக்கம் தொலைத்தேன்

கனவைத் தொலைத்தேன்

கனிவைத் தொலைத்தேன்

நனவைத் தொலைத்தேன்

நைத்து தொலைத்தேன்

பாசம் தொலைத்தேன்

பார்வை தொலைத்தேன்

நேசம் தொலைத்தேன்

நெருக்கம் தொலைத்தேன்

தொலைத்தேன் தொலைத்தேன்

தொலைக்காட்சி பார்த்து தொலைத்தேன்



அன்புடன் ஜோதிபாரதி

Thursday, December 20, 2007

என் தாய்த்தமிழகமே!

ஈழம் என்பது ஈரநிலம்

அதன் தூரம் தெரியுமா உனக்கு?

பாரம் குறைவதற்குள்

படித்து தெரிந்துகொள்

ஐயம் இருந்தால்

பையத் தெரிந்துகொள்

இனவாடை மறந்தாலும் -உனக்கு

பிணவாடை தெரியாதா?

இதயம் அடைத்ததோ

மூக்கு அடைத்ததோ -அல்லது

இரண்டும் தானோ?

செஞ்சோலைக் குயில்கள் பலியான போது -நீ

பஞ்சாக பற்றாமல் துயில் கொண்டதேனோ?

பாருக்குச் சொல்லாமல் பதுங்கி இருந்ததேனோ?

நடந்தது நடந்தவையாக எண்ணி

நடப்பவை நல்லவையாக மலர

துடிக்கும் இதயம் ஈழம்

என்று துடிக்கட்டும்

நொடிக்கும் விதையும் -நல்

தமிழ் ஈழம் கொடிகட்டும் - தமிழா

இழுக்கு வருவதற்குள் - உன்

அழுக்கு தேய்த்துக்கொள்!


அன்புடன் ஜோதிபாரதி

Saturday, December 15, 2007

தமிழக அரசியல் தலைவர்கள் - பலமும் பலவீனமும்

தமிழக அரசியல் தலைவர்கள் - பலமும் பலவீனமும்


கருணாநிதி

பலம் : இலக்கியவாதி, தமிழ் பற்று மிக்ககவர், பேச்சாற்றல் எழுத்தாற்றல் மிக்கவர். கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது.

பலவீனம் : முடிவெடுக்க முகத்தாட்சன்யம் பார்ப்பவர். எதிர் கட்சி தலைவர்களைக் காட்டிலும் தனது பிள்ளைகள், பேரபிள்ளைகளுக்கு பயப்படுபவர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு, அவர்களை கொல்லும் சிங்கள ராணுவத்திற்கு ஆயுதம் அளிக்கும் மத்திய அரசுக்கும் ஆதரவு அளிப்பவர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எதாவது பதவி கொடுத்து விட நினைப்பது.


ஜெயலலிதா

பலம் : தனது முடிவே இறுதியானது என்கிற தைரியம். ஆங்கில அறிவு. ஆங்கிலம், சமஸ்கிர்தம், ஹிந்தி கலக்காமல் தமிழ் பேசுவது.

பலவீனம் : மூத்த தலைவர்களை மதிப்பதில்லை. தொண்டர்களுக்கும்,தலைவர்களுக்கும் எட்டா கனியாக இருப்பது. பதவிக்கு வந்துவிட்டால் அதற்குள்ள எல்லா பவரையும் காட்ட நினைப்பது. காலில் விழும் கலாச்சாரத்தை தடுக்காதது. தனக்கு உதவிய சிலரின் மரணத்துக்கு கூட போகாதது. உடன்பிறவாச் சகோதரியை தன்னுடன் வைத்து இருப்பது.


விஜயகாந்த்

பலம் : சினிமா கவர்ச்சியின் மூலம் தமிழகம் முழுதும் அறிமுகம். பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் என்னும் அனுபவம் உள்ள தலைவரை தன்னுடன் வைத்து இருப்பது. ஏழைகளை பற்றி கவலைப்படுவதாக பேசுவதும், அது மக்களிடம் எடுபடுவதும். தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று இருப்பது.

பலவீனம் : பொது இடங்களில் கோபம் வந்தால் அடக்கமுடியாமல் யாரையாவது அடித்து விடுவது. மனைவி, மைத்துனர் போன்ற உறவினர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்திருப்பது.


மருத்துவர் இராமதாசு

பலம் : யாருக்கும் பயப்படாமல் கருத்துக்களை வெளியிடுவது. தமிழகத்தின் வட பகுதியில் கணிசமான மக்களின் ஆதரவை பெற்று இருப்பது. தமிழ் பற்று இருப்பதாக கூறுவது.

பலவீனம் : குறிப்பிட்ட சாதியினருக்கு போராடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே 2011-ல் தமிழகத்தின் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்வது. நடிகர்களை சம்பந்தம் இல்லாமல் வம்புக்கு இழுப்பது. கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னையில் வைக்காமல், அவரது ஊரில் வைத்து இருப்பது. 80-களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மரத்தை வெட்டி போட்டு மக்களை அல்லல் பட வைத்தது.


வைகோ

பலம் : தமிழ் இலக்கியத்திலிருந்து, இசை,அரசியல்,சட்டம் எல்லாவற்றையும் தன்னகத்தே திறமையாகக் கொண்ட சிறந்த பேச்சாற்றல். புள்ளி விவரத்தோடு பேசும் திறமை. இலங்கை தமிழர்கள் மீது தீராத பற்று. அவர்களுக்காக 80-களில் இருந்து போராடுவது.

பலவீனம் : எந்த காரணத்துக்காக கருணாநிதியை விட்டு பிரிந்தாரோ அதை மறந்து அவருடன் கூட்டணி வைத்தது, (அவர் பிரிந்தபோது 3 தொண்டர்கள் தீக்குளித்து இறந்தார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்). விடுதலை புலிகளை ஆதரித்துக்கொண்டு, அதை எதிர்க்கும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருப்பது. முக்கிய தலைவர்கள் அனைவரும் இவரது காலை வாரியது.


ஜி.கே.வாசன்

பலம் : ஜி.கே.மூப்பனாரின் மகன் என்ற வகையில், முக்கிய தலைவர்கள் அனைவரும் இவரை ஆதரிப்பது. மற்றவர் மனம் புண்படாமல் தனது தந்தையை போல் பேசுவது. காங்கிரஸ் தொண்டர்களில் முக்கால்வாசி பேர் இவர்தான் தமிழக தலைவர் என்று நினைத்துக்கொண்டு இருப்பது.

பலவீனம் : மத்திய அமைச்சராக இருந்து கொண்டு தமிழகத்துக்கு இன்னும் எதாவது செய்யாமல் இருப்பது. கோஷ்டி அரசியலுக்கு துணை போவது. இலங்கை தமிழர் பிரச்சனையை ராஜீவ் காந்தி கொலையோடு தொடர்பு படுத்தி இன்னும் தள்ளிவைப்பது.


சரத்குமார்

பலம் : நாடார் சமூக ஆதரவு. சினிமா பிரபலமாக இருப்பதால் தமிழகம் முழுதும் பிரபலம். மனைவி ராதிகாவின் ஊக்கம். தொலைநோக்கு சிந்தனைகளை தன்னுள் வைத்திருப்பது.

பலவீனம் : நாடார் சமூக ஆதரவு. தானும் விஜயகாந்த் மாதிரி வந்துவிடலாம் என்று நினைப்பது. கட்சி கூட்டங்களில் மனைவி ராதிகாவை இரண்டாம் இடத்தில் வைத்திருப்பது. இந்த கட்டமைப்புடன் இருந்தால் ராமதாஸ் மாதிரி கூட வரமுடியாது என்பதையும், ஆட்சிக்கு வரமுடியாது என்பதையும் அறியாமல் 2011-ல் ஆட்சியை பிடிப்பேன் என்று சொல்வது.

அன்புடன் ஜோதிபாரதி

பெரியார் அண்ணா கண்ட திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியா இது?

பெரியார் அண்ணா கண்ட திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியா இது?

பெரியார் அண்ணா கண்ட திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியா? அல்லது முப்பரிமான வளர்ச்சியா(இரண்டு கைகள், தலை இவற்றை சேர்த்து விழுதல்) என்பது அவரவர்களுக்கே வெளிச்சம்.

மேலே உள்ள படத்தில் கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் சாய்பாபா காலை தொட்டு வணங்குகிறார். கலைஞர் மனச்சாட்சி உறுத்தலால் வேறு பக்கம் திரும்பிக்கொண்டார். அமைச்சர் துரைமுருகனைப் பாருங்கள் பக்தி பழமாகி பார்த்து ரசிப்பதை. கலைஞர் என்னவோ கி.வீரமணியின் அனுமதி வாங்கிக்கொண்டு தான் சாய்பாபா அவர்களை சந்தித்தார்.(வீரமணி கலைஞருக்கு எப்போது எஜமானர் ஆனார் என்பது வேறு கேள்வி) . கலைஞர், சாய்பாபாவுக்கு புத்தகம் கொடுத்திருப்பார் போல தெரிகிறது. "இலங்கையில் சிங்கள ஆட்சியின் சிறப்பு" என்கிற புத்தகமாக இருக்குமோ?




மேலே உள்ள படத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் காலில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் (கலைராஜன்) விழுந்து கிடக்கிறார். ஒ. பன்னீர்செல்வம் வேதனையோடு வேறுபக்கம் பார்க்கிறார். அல்லது பழகிப்போனதால் அதை ஒருபொருட்டாக கருதவில்லை. டி.ஜெயக்குமார், விசாலாச்சி நெடுஞ்செழியன், துரை. கோவிந்தராஜன், தளவாய் சுந்தரம் ஆகியோர் உற்று நோக்குகிறார்கள், செம்மலை எதை பார்த்து சிரிக்கிறார்? நமக்கு இதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. பெரியார், அண்ணா வழி வந்தவர்களா இவர்கள்???
உண்ணாவிரதம் இருக்கும்போது ஆம்பூர் பிரியாணி சாப்பிடும் பழக்கம், சத்தியாகிரகவாதிகளை சங்கடப்படுத்தும் நிகழ்ச்சி. இனியாவது திருந்துவார்களா இவர்கள்?

அன்புடன் ஜோதிபாரதி

Tuesday, December 11, 2007

இன்று மகாகவி பாரதியாரின் 125-வது பிறந்தநாள்!


இன்று மகாகவி பாரதியாரின் 125-வது பிறந்தநாள்!


வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு கீழ்கண்ட பாரதி பாடல் சமர்ப்பணம்!!

மகாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவரைப்பீடித்திருந்தது தமிழ் மக்களின் நிலை பற்றிய பெரும்துயரமே ஆகும்.

`தமிழ் இனத்தவர்கள் தமக்கென நாடு இன்றி

அந்நிய நாடுகளில் அவதியுறுவதை

எண்ணிக் கலங்கி பாரதி; ஆப்பிரிக்

கத்து காப்பிரி நாட்டிலும் தென்

முனையடுத்த தீவுகள் பலவினும், பூமிப்

பந்தின் கீழ் புறத்துள்ள பற்பலத்

தீவிலும் பரவி இவ்வெளிய தமிழ்ச்சாதி

தடியுதையுண்டும் காலுதையுண்டும் கயி

ற்றடியுண்டும் வருந்திடும் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல்

பெறாது செத்திடுஞ் செய்தியும்...' கேட்டு `விதியே விதியே தமிழ்ச்சாதியை என் செய்ய நினைத்தாய் எனக் குரையாயோ' எனப் புலம்பினார்.

பிஜித் தீவிலே தமிழ் பெண்கள் கரும்பு தோட்டங்களில் பட்ட துன்பங்களைக் கேட்டு குமுறினார் பாரதியார். அவர்களுடைய கற்பு வஞ்சமாக கவரப்பட்டபொழுது அவர்கள் விம்மி விம்மி அழுதார்கள். அவர்கள் விம்மி அழுத குரலை காற்றே நீ கேட்டிருப்பாய்
என்று அவர்களுடைய வேதனையை எடுத்து கூறுகிறார் பாரதியார். அவருடைய மறைவிற்கு சில வருடங்களுக்கு முன் கொதித்து எழுதிய பாடல்.

கரும்புத் தோட்டத்திலே - அவர்

கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி

வருந்து கின்றனரே! ஹிந்து

மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்

சுருங்குகின்றனரே - அவர்

துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு

மருந்திதற் கிலையோ? - செக்கு

மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு

பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது

எண்ணம் இரங்காதோ? - அந்த

ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்

மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு

மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்

கண்ணற்ற தீவினிலே - தனிக்

காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

நாட்டை நினைப்பாரோ? - எந்த

நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை

வீட்டை நினைப்பாரோ? - அவர்

விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்

கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்

கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்

மீட்டும் உரையாயோ?
- அவர்

விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர் (கரும்புத்தோட்டத்திலே)

நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு

நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்

பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்

பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு

தஞ்சமு மில்லாதே - அவர்

சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்

மிஞ்ச விடலாமோ? - ஹே

வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி! (கரும்புத்தோட்டத்திலே)



அன்புடன் ஜோதிபாரதி

Saturday, December 8, 2007

Read/Write in Tamil

Read/Write in Tamil

தேன்கூட்டிலிருந்து "அத்திவெட்டி அலசல்" வாசகர்களுக்காக!
இதிலே ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை, மறுமொழிப் பெட்டியில் கேட்கலாம்.

Tamil Computing Tutorial for reading and writing Tamil on the Net - Voice on Wings
Reading Tamil text
When you open a tamil blog and see only question marks or boxes instead of tamil letters, it means your computer is not equipped with any Unicode font for Tamil (Note: ‘Unicode’ is the universal encoding mechanism for computers, that accommodates all the languages of the world with a single coding scheme).
Step 1: To install the needed font(s), download the installer from this web page and execute it. This would install 10 Unicode Tamil fonts in your computer. If you use Internet Explorer 6.0 or above, this should enable you to view the page correctly.
Step 2: (Only for Firefox browser) You may see consonants and vowel modifiers displayed separately, instead of being shown as composite letters (uyir mei). To correct this, download this file and save it in the folder below:
C:\Documents and Settings\[User Name]\Application Data\Mozilla\Firefox\Profiles\xxxxx.default\chrome (for Windows 2000/XP)(OR)
C:\WINDOWS\Application Data\Mozilla\Firefox\Profiles\xxxxxxx.default\chrome (for Windows 98/Me)Note: [Username] denotes your Windows username‘xxxx.default’ is a folder name under the Profiles folder with ‘.default’ at the end
If you are not able to locate the folder ‘Application Data’ (sometimes it is hidden), type ‘%AppData%’ in the Windows’ Start>Run dialog box. It would open the folder in an Explorer window, from which you can navigate to the destination folder specified above.
It is very important to save the downloaded file in the correct location as above.
With the above steps, it would be possible to read tamil blogs using IE or Firefox browsers, on Windows platforms.

தமிழில் எழுதுவது

மேற்கூறிய வழிமுறையைக் கையாண்டு (அல்லது அப்படியெல்லாம் எதுவும்் செய்யாமலேயே), இதைப் படிக்கும் வசதியைப் பெற்று விட்டீர்கள். இனி, தமிழ்ப்பதிவுகளில் (i.e. Tamil blogs) உங்கள் கருத்துக்களை, தமிழிலேயே பதிக்க விரும்புகிறீர்கள். அது மட்டுமல்லாமல், நீங்களும் ஒரு தமிழ்ப்பதிவைத் தொடங்கி, தொடர்ந்து எழுதவும் விரும்புகிறீர்கள். ஆனால் தமிழில் தட்டச்சு (typing) செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. அப்படியென்றால்் மேற்கொண்டு படியுங்கள்.

முதல் கட்டம்: மிகவும் எளிதான வழி இவ்வலைப்பக்கத்திலுள்ள சுரதாவின் ‘புதுவை’ தமிழ் editorஐப் பயன்படுத்துவதே. இதில் romanized எனப்படும் ஒலியியல் முறையில் தட்டச்சு செய்யலாம். (இம்முறையை, ‘அஞ்சல்’ என்றும் குறிப்பிடுவதுண்டு) அதாவது, ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே, அவைகளுக்கு நிகரான ஒலிகளைக் கொண்ட தமிழ் எழுத்துக்களைப் பெறலாம். எப்படி என்று பார்ப்போம்.
தமிழெழுத்துக்களும், அடைப்புக்குறிகளுக்குள் அவற்றைப் பெறுவதற்கான ஆங்கில எழுத்துக்களும், கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
உயிரெழுத்துக்கள்: அ(a), ஆ(aa or A), இ(i), ஈ(ii or I), உ(u), ஊ(uu or U), எ(e), ஏ(ee or E), ஐ(ai), ஒ(o), ஓ(oo or O), ஔ(au)
ஆய்த எழுத்து: ஃ(f)
மெய்யெழுத்துக்கள்: க்(k of h), ங்(ng), ச்(s or ch), ஞ்(nj), ட்(t or d), ண்(N), த்(th), ந்(n- or w), ப்(p or b), ம்(m), ய்(y), ர்(r), ல்(l), வ்(v), ழ்(z), ள்(L), ற்(R), ன்(n)
கிரந்த எழுத்துக்கள்: ஜ்(j), ஸ்(S), ஷ்(sh), ஹ்(-h), க்ஷ்(ksh), ஸ்ரீ(Srii or SrI)
உயிர்மெய்யெழுத்துக்கள்: இவற்றைப் பெற, மெய்யெழுத்தைத் தொடர்ந்து உயிரெழுத்தை தட்டச்ச வேண்டும். உதாரணம்,க(ka) = க்(k) + அ(a),கா(kaa or kA) = க்(k) + ஆ(aa or A)………
இந்த அடிப்படையில், எல்லா உயிர்மெய்யெழுத்துக்களையும், கிரந்த வரிசை எழுத்துக்களையும் (ஜ, ஜா, ஜி, ஜீ, etc.) பெறலாம்.
உற்று நோக்கினால், இதைக் கற்றுக் கொள்வது மிக எளிது என்பது புலப்படும். காரணம்், தட்டும் ஆங்கில எழுத்துக்கும், கிடைக்கப்பெறும் தமிழெழுத்துக்குமுள்ள ஒலி ஒற்றுமை. ஒரு சில எழுத்துக்களைத் தவிர, இதில் பெரிதாக மனப்பாடம் செய்ய எதுவுமில்லை. முதல் கட்டமாக, இதைக் கொண்டு நீங்கள் தமிழில் தட்டச்சுவதற்கு பயிற்சி பெறலாம். இதுபோல், வேண்டிய தமிழ் வாக்கியங்களை உருவாக்கி, அவற்றை copy செய்து கொண்டு, அவற்றை வேண்டிய இடத்தில் ஒட்டி (paste), உங்கள் கருத்துகளை தமிழிலேயே வெளியிடலாம்.

இரண்டாவது கட்டம்: இப்போது நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய போதிய பயிற்சி பெற்று விட்டீர்கள். வலைப்பதிவு விவாதங்களிலும் தமிழிலேயே உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறீர்கள். இருந்தும், சொந்தமாக ஒரு வலைப்பதிவு இருந்தால் இன்னும் நன்றாயிருக்குமே என்று எண்ணுகிறீர்கள். அப்படியென்றால் உங்கள் கணினியில் (computer / PC) தமிழ் தட்டச்சுக் கருவியை (Tamil typing tool) நிறுவுவதற்கான நேரம் வந்து விட்டதென்று பொருள். இன்று பலரும் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு கருவி தமிழா குழுவின் ‘எ-கலப்பை’யாகும் (அதாவது, எலக்டிரானிக் கலப்பை). இதனை இங்கிருந்து download செய்து நிறுவிக்கொள்ளலாம். இதைக் கொண்டு, browser, notepad, word processor, email client போன்ற பலவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம். Alt+2 விசைகளை அழுத்தினால், உங்கள் keyboard தமிழுக்கு மாறும். மறுபடி Alt+2 அழுத்தினால், திரும்பவும் ஆங்கிலத்துக்கு மாறிக்கொள்ளும்.

மூன்றாவது கட்டம்: ஒலியியல் / romanized / அஞ்சல் முறையை நன்கு பழகி விட்டீர்கள். ஆனால், கொஞ்சம் எழுதுவதற்குள் அயர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. ஒரு எழுத்தைப் பெறுவதற்கு நான்கைந்து விசைகளை அழுத்த வேண்டியுள்ளது. இவ்வாறாக, சிறு கட்டுரைகளை எழுதுவதற்கும் அதிகமான நேரம் செலவாகிறது. இதற்குத் தீர்வு ‘தமிழ்நெட் 99′ எனப்படும் தமிழ் தட்டச்சு முறையைப் பயின்று கொள்வதே. அதைப்பற்றி இந்த வலைப்பக்கத்தில் காணலாம் (ஒரு பயிற்றுக் கருவியும் வழங்கப்பட்டுள்ளது இப்பக்கத்தில்). தமிழ்நெட் 99 முறையில் தட்டச்சுவதற்கு தமிழாவின் எ-கலப்பை (தமிழ்நெட்99) எனப்படும் கருவியை download செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். இது, செயல்பாட்டில் எ-கலப்பை(அஞ்சல்)ஐ ஒத்ததே. தமிழெழுத்துகளுக்கான விசைகள்தான் மாறும். இதில் பயிற்சி பெற்றால் வெகு வேகமாக தமிழில் தட்டச்ச முடியும், அயர்ச்சியும் ஏற்படாது.

நான்காவது கட்டம்: மேலே குறிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றியதால், தமிழ்க்கணிமை (Tamil computing) உங்கள் வாழ்வில் ஒரு இன்றியமையாத அம்சமாகி விடுகிறது. அப்படியிருக்கையில், உங்களுக்கு வாரக்கணக்கில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது, அல்லது அலுவலகத்தில் அதிகமான நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. இடையிடையே தமிழ்ப்பதிவுகளைப் படிக்கின்றீர்கள். ஆனால் தமிழில் தட்டச்சுவதற்கு வேண்டிய கருவிகளெல்லாம் இத்தகைய பொதுவிடங்களில் கிடைக்காததால்், உங்களால் விவாதங்களில் முழுமையாகப் பங்கு பெற முடிவதில்லை. அல்லது உங்கள் அனுபவங்களை / எண்ணங்களை சுடச்சுட உங்கள் வலைப்பதிவில் இட முடியவில்லை. இதற்குத் தீர்வுதான் தமிழாவின் TamilKey Firefox Extension. இதற்கு Firefox browser நிறுவப்பட்டிருக்க வேண்டும். அதன் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து் வருவதால், நீங்கள் பயன்படுத்தும் பொதுக் கணினியில் அது நிறுவப்பட்டிருப்பது சாத்தியமானவொன்றே. அதன் மீது மேலே குறிப்பிட்ட extensionஐ நிறுவிக் கொண்டால், பிறகு எ-கலப்பையைப் போலவே தமிழில் தட்டச்சலாம். இது 10KBக்கும் குறைவாகயிருப்பதால், ஒரு நொடியில் இதை நிறுவிக் கொள்ள முடியும். (குறிப்பு - இதை Firefoxக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும். MS Word, Notepad போன்றவைகளுடன் இதைப் பயன்படுத்த முடியாது). F12 விசையை அழுத்தினால் தமிழ்நெட்99 செயல்பாட்டைப் பெறலாம். Ctrl+F12 விசைகளை அழுத்தினால் romanized / அஞ்சல் செயல்பாட்டைப் பெறலாம். F9 விசையைக் கொண்டு ஆங்கிலம் - தமிழ், இவற்றில் ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிக்குத் தாவிக் கொள்ளலாம். இவ்வாறு, நீங்கள் பொதுக்கணினிகளிலிருந்தும் தமிழில் உங்கள் கருத்துகளை / படைப்புகளை அளிக்க வாய்ப்புள்ளது.

அன்புடன் ஜோதிபாரதி

Thursday, December 6, 2007

மறக்கப்பட்ட ஹீரோ! - திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் எஸ்.டி.எஸ் (Forgotten Hero! - Dravidan Leader S.D.S)

மறக்கப்பட்ட ஹீரோ! - திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் எஸ்.டி.எஸ்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் செண்டாங்க்காடு என்ற கிராமத்தில் பிறந்து, பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பைத் தொடர்ந்தார். இவர் படித்த இந்த பள்ளியில் தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் நாவலர் இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன் ஆகியோரும், முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமனும் படித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவராக இருக்கும்போதே நீதிகட்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். பள்ளி படிப்பை முடித்த திரு எஸ்.டி.எஸ் அவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ எனப்படும் பொறியியல் பட்டமேற்படிப்புக்காக சேர்ந்தார்.
1947 -ல் அண்ணாமலை பல்கலைக்கழக உணவு விடுதியில் பெரியார் பிறந்த நாள் கொண்டடியதற்க்காக பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டவர்.
மாணவப் பருவத்திலேயே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் அன்பையும் பாராட்டையும் பெற்றார்.
1951-ல் அரசு அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் வகுப்புவாரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மாணவப் பருவத்திலேயே போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

1955-ல் தமிழர்கள் வாழும் பகுதியான தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை ஆகியவை கேரளாவுடன் இணைக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர். அப்போது
திராவிட மாணவர் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக இருந்தார்.
1957-1967 மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல மாநாடுகளை நடத்தி மாணவர்களிடையே இந்தி எதிர்ப்பு உணர்வுகளை ஏற்படுத்தியவர். மாணவர் பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களின் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றவர்.
1965-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர்.

திராவிட இயக்கத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவர் கே. ஏ. மதியழகன். அவர் அப்பொழுது (1972) தமிழக சட்டசபையில் சபாநாயகராக இருந்தார். “தி.மு.க.வில் கருணாநிதியின் கை ஓங்குவதையும் தி.மு.க ஆட்சியில் தவறுகள் பெருகிக் கொண்டிருப்பதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.சபாநாயகர் பதவி வகிக்கும் மதியழகனும் எம்.ஜி.ஆரின் இயக்கத்தை ஆதரிக்கத் தொடங்கினால், தம் நிலைமை மிகவும் பலவீனமாகிவிடும் என்று முதல்வர் கருணாநிதி அஞ்சினார். ஆகவே அவர், தி. மு. க. வில் இருந்த எஸ். டி. சோமசுந்தரம் எம். பி. யை சபாநாயகர் மதியழகனிடம் அனுப்பி அவரைச் சரிக்கட்டும்படி கேட்டுக்கொண்டார்.ஆனால், எஸ். டி. எஸ். அவர்களையே சரிக்கட்டி எம்.ஜி.ஆரோடு சேரும்படி செய்துவிட்டார், மதியழகன்.இதை தனதுநூல் ஒன்றில் கருணாநிதி வருத்தத்தோடு குறிப்பிட்டிருக்கிறார். இதுவே
எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு திருப்புமுனையாக, அடித்தளமாக அமைந்தது.

1972-ல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க ஆரம்பித்தபோது, அவருடன் தோளோடு தோள் நின்று அவருக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனை வழங்கினார். அவரால் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவர்.

எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கும் போது அவருக்கு துணை நின்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், முனுஆதி, குழ.செல்லையா, எஸ்.ஆர்.இராதா, கே.சௌந்தரராசன், இரா.மோகனரங்கம், ஜேப்பியார், என்.எஸ்.இளங்கோ, எம்.கே.கதாதரன், முசிறிப்புத்தன் ஆகியோர்கள். மற்ற தலைவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரின் செல்வாக்கை கண்டு பின்பு தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு எஸ்.டி.எஸ் அவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள், புதுவை மாநில பொதுத் தேர்தல்கள் ஆகியவற்றில் தேர்தல் பணிக்குழு தலைவராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டு திறம்பட பணியாற்றி வெற்றிக்காக பாடுபட்டவர்.

அப்போதைய ஆளும் கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஏற்படுத்தப்பட்ட போராட்ட நடவடிக்கை குழுவுக்கு தலைவராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர்.

1973 ஆம் ஆண்டு அக்டோபரில், மாஸ்கோவில் உலக சமாதானக் கழக மாநாடு நிகழவிருந்தது. அதில் கலந்துகொள்ளும்படியும் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு வந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் அந்த மாநாட்டுக்குத் தம் பிரதிநிதியாக அமைப்புச் செயாலாளர் கே.ஏ.கே., எஸ்.டி.எஸ். ஆகியோரை அனுப்பி வைத்தார்.
அ.தி.மு.கவின் பிரச்சார செயலாளராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார்.
தந்தை பெரியார் சிலை அமைப்பு குழுவின் தலைவராகவும், பெரியார் சிலை திறப்பு வரவேற்புகுழு தலைவராகவும் எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர்.
1967-1978 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். மூன்று முறை தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு முறையே முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன், மதுக்கூர் ஜமீன்தார் கிருஷ்ணசாமி கோபாலர், திரு. எல்.கணேசன் ஆகியோரை தோற்க்கடித்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் முதலாவதாக தேர்ந்த்தேடுக்கப்பட்ட எம்.பியும் இவரேயாவார்.
1978-1980 சட்ட மேலவை உறுப்பினர். சட்ட மன்ற தலைவர். எம்.பியாக இருந்த திரு.எஸ்.டி.எஸ் அவர்களை தமிழக சட்ட மேல்சபை உறுப்பினராக்கி, அமைச்சராக்கி தன்னுடன் வைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர் என்றால் அவர்மீது எவ்வளவு பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்திருப்பார். திரு எம்.ஜி.ஆர். அவர்கள், திரு எஸ்.டி.எஸ் மீது எவ்வளவு பற்றும், நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதையும், இலங்கை பிரச்சனையை கையாள எம்.ஜி.ஆருக்கு எவ்வகையில் உதவினார் என்பதையும். முன்னாள் தமிழக காவல் துறை தலைவர் (டி.ஜி.பி) திரு கே. மோகன்தாஸ் அவர்கள் தனது Dr MGR-The Man and The Myth என்ற நூலில் தெளிவாக குறிப்பிடுகிறார்.

1980 சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் திரு ஏ.ஆர். மாரிமுத்து அவர்களை தோற்க்கடித்தார்.
1978-1984 வருவாய்த்துறை அமைச்சர்,
வருவாய்த்துறை அமைச்சருக்கு என்னை போன்றவர்களின் பாராட்டு மட்டுமே வருவாய் என்று எம்.ஜி.ஆரால் புகழாரம் சூட்டப்பட்டவர்.

எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் கிராமங்களில் இருந்த மணியகாரர் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்து, கிராம முறையை மாற்றி அமைத்து செம்மையாக்கினார். இந்தியாவின் மற்ற மாநில முதல்வர்களின் பாராட்டையும் பெற்றார். திரு பரத்வாஜ் அவர்கள் தனது ஆளுமை- கர்ணம், மணியம் பற்றிய கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

Let me give you a small example. A Karnam was summoned by OP Raman – a minister in the late sixties – in the Dindigul district. The village official did not heed this call. When this was made into a big issue, the particular Karnam is said to have bluntly told Raman's men, "he may be your minister. But as far as I am concerned, he is yet another citizen within the ambit of my administration. He has asked me to travel a long way to the Samayanallur Electricity Board Guest House with the village documents. This violates the provisions of the Madras Karnam Act 1802, Rule 13 which stipulates that the account books should not be taken out of their respective villages." Obviously the politicians were nonplussed by this and other similar occasions. One of them, a Thanjavur based minister in MGR's cabinet – SD Somasundaram succeeded in scrapping the reign of Karnams and Maniams. In their place, VAOs were appointed. Village accounts weren't maintained properly and hence nobody knew the real picture ever since. Besides the VAOs didn't belong to the village where they worked.

இலங்கை தமிழர்கள் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்டிருந்தார். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அமைதித் தீர்வு ஏற்ப்பட வேண்டும் என்று விரும்பியவர். அப்பிரச்சனையில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிறந்த ஆலோசகராக திகழ்ந்தார். இலங்கையில் 1983 இனப்படுகொலை நடந்தபோது மனம் கொதித்து தனது எதிர்ப்பை கருப்பு சட்டை போராட்டங்கள் மூலம் தெரிவித்தவர்.

"போர்வாள்" என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.

இவரது வழியை பின்பற்றி அரசியலில் சுடர் விட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், முன்னாள் கொறடா துரை.கோவிந்தராஜன், முன்னாள் அமைச்சர்கள் வெள்ளூர் வீராச்சாமி, அழகு திருநாவுக்கரசு, ஆர்.வைத்தியலிங்கம், அ.மா.பரமசிவன், வ.சத்தியமூர்த்தி, முன்னாள் வாரியத்தலைவர் கு.தங்கமுத்து, துரை. திருஞானம், முன்னாள் எம்பிக்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா, ஓ. எஸ்.மணியன், இரா.சாமிநாதன், கொற்கை மதியழகன், கே.முஸ்தபா கமால், மன்னை சு.ஞானசேகரன், அத்தி.கோ.இராமலிங்கம், ஏ.முகைதீன் மரைக்காயர், வி.அழகிரிசாமி, சிங்குராசு, த.கர்ணன், வி.ஆர்.கே.பழனியப்பன் மற்றும் பலர்.

1983-ல் பட்டுக்கோட்டை பகுதியில் தொழில் நுட்ப கல்லூரியை நிறுவி ஏழைகள் தொழில் கல்வி படிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்தார்.
1984-ல் திருச்சியில் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்திற்கிடையே நமது கழகம் என்ற கட்சியை தொடக்கி பிரகடனப்படுத்தினார்.
1985-ல் இலங்கைத்தமிழருக்காக மதுரையில் மிகப்பெரிய எழுச்சி பேரணியை நடத்தி இரயில் மறியல் போராட்டத்தின் மூலம் சிறை சென்றவர்.
1987-ல் எம்.ஜி.ஆர் அவர்களின் அழைப்பை ஏற்று அ.இ.அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
1987-ல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவின் தலைமையில் பணியாற்றினார்.

1991 சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தி.மு.கவைச் சேர்ந்த தற்போதைய அமைச்சர் திரு எஸ்.என்.எம்.உபயத்துல்லா அவர்களை தோற்க்கடித்தார்.
1991-1996 சட்டப்பேரவை உறுப்பினர், வருவாய்த்துறை அமைச்சர்.

1995-ல் எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டை தஞ்சாவூரில் நடத்திக்காட்டி அனைவரின் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியவரானார்.
சுற்றுச்சாலை, இரயிவே மேம்பாலம், புதிய பேருந்து நிலையம் போன்றவற்றை தஞ்சாவூருக்கு ஏற்ப்படுத்தி கொடுத்தார்.
தமிழின படுகொலை, காவேரித் தாய்க்கு கருணாநிதி செய்த கேடுகள், இலங்கை இனப்படுகொலை பற்றி இந்திய பிரதமருக்கு எஸ்.டி.எஸ்ஸின் பத்து கோரிக்கைகள், மதுவிலக்கு கொள்கையில் தமிழக முதல்வர்கள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். .
தடகள விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். பள்ளியிலும், அண்ணாமலை பல்கலைகழகத்திலும் ஓட்டபந்தயத்தில் தொடர்ந்து முதல் இடத்தை பெற்றுவந்தார்.

பொதுமக்கள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்ததால் அனைவராலும் "பாசமிகு எஸ்.டி.எஸ்" என்று அழைக்கப்பட்டவர்.

ஆயிரக்கணக்கான சுயமரியாதை தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்து சுயமரியாதை சுடராக விளங்கியவர்.

மிகவும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லாதபோது சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்தார்.


ரஷ்யா,ஜப்பான்,ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பயணித்துள்ளார்.

பிறந்தது : 25.02.1923 மறைந்தது : 06.12.2001


பாசமிகு அய்யா எஸ்.டி.எஸ் அவர்களைப்பற்றி எழுத வேண்டும் என்பது எனது ஆவல். ஏனோ அவரது மறைவு யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் இறந்ததாலோ என்னவோ? அவரை சந்திக்கிற வாய்ப்பு எனக்கு சிலமுறை கிட்டியதை பெரும் பேராக நினைக்கிறேன். இன்று அவரது நினைவு நாள் அல்லவா அதனால் அவரைப் பற்றிய கட்டுரையை வெளியிடுவது சிறப்பாக அமையும் என்று வெளியிடுகிறேன். இதையே அவருக்கு எனது 6-ம் ஆண்டு நினைவுநாள் கண்ணீர் அஞ்சலியாக்குகிறேன்.


அன்புடன் ஜோதிபாரதி

Tuesday, December 4, 2007

தாயா? தாரமா?? (How to Handle?)

தாயா? தாரமா?? (How to Handle?)

பெற்றெடுத்த தாயையும், நம்பி வந்த தாரத்தையும் சமநிலையில் நேசித்து , இருவருக்கும் நடுநிலையில் அன்பை பகிர்ந்தளிக்க தடுமாறும் ஆண்களுக்கு பயன் படக்கூடிய சில டிப்ஸ்.....


அம்மாவிடம்......
-------------------
1.உங்கள் தாயின் சமையல் தான் சிறந்தது என்று உங்கள் மனைவியிடம் உங்கள் தாயின் முன் உயர்த்தி பேசாதிருங்கள். உங்கள் தாயின் மனதை அதை குளிர்விக்கும் அதே நேரத்தில், உங்கள் மனைவியின் மேல் ஒரு இளக்காரமான எண்ணம் உங்கள் தாயின் மனதில் உருவாக்கும்.

2. தனிமையில் உங்கள் அம்மாவிடம் பேசும்போது, " அம்மா எனக்கு நல்ல பெண்ணைப் பார்த்து மணமுடித்திருக்கிறீர்கள்" என்று உங்கள் தாயின் தேடுதலில் கிடைத்த உங்கள் மனைவியின் நல்ல குணங்களையும் , பண்புகளையும் கோடிட்டு காட்டுங்கள். உங்கள் மனைவியை எவ்விதத்தில் உங்கள் அன்னைக்கு நீங்கள் வெளிக்காட்டுகிறீர்களோ அவ்விதத்தில்தான் அவளை அவர் உணர்வார், மதிப்பார்.
[ அதற்கென்று மனைவியை 'ஆஹோ, ஓஹோ' என்று புகழ்ந்து தள்ளி சொதப்பிவிடாதிருங்கள். ஓவரா புகழ்ந்தா உங்கள் அம்மாவிற்கு உங்கள் ம்னைவியின் மீது பொறாமை கலந்த எரிச்சலும் வரலாம்]

3.நீங்கள் காதலித்து திருமணம் முடித்தவராகயிருந்தால், உங்கள் மனைவியை பற்றி இன்னும் அதிகமாக நல்லவிதமாக வெளிப்படுத்தி அவரை உங்கள் அன்னையுடன் இணைக்க முயலுங்கள். அப்போதுதான் தன் மகனுக்கு தானே துணை தேடி தரும் தருணத்தை தடுத்து விட்டாளே இவள் என்ற மனக்கசப்பை உங்கள் மனைவியின் மீதிருந்து அகற்ற அது உதவும்.

4. நீங்கள் உங்கள் அம்மாவிற்கு பரிசளிக்கும் பொருளோ, புடவையோ அதை உங்கள் மனைவி ஆசையுடன் தேர்ந்தெடுத்தது என்று கூறி கொடுங்கள். உங்கள் மனைவியின் மீது மதிப்பையும், நேசத்தையும் அது ஏற்படுத்தும்.


மனைவியிடம்....
-------------------
உங்கள் தாய் , உடன் பிறந்தோர் இவர்களைப் பற்றி புகார் மனுவை உங்கள் மனைவி தனிமையில் உங்களிடம் தொடுக்கும் நேரத்தில், நிதானத்துடன் அவர் கூறுவதை கேட்டுக்கொள்ளுங்கள். எதிர்த்து தர்க்கிக்கவோ, " நீ அட்ஜஸ்ட் பண்ணிட்டுப்போ " என்று அதிகாரம் செலுத்தவோ அதுவல்ல தருணம். அப்படி நீங்கள் எதிர்மறைக் கருத்துக்களையும், உங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தினால் அது உங்கள் மனைவியின் உள்ளக் குமறலை அதிகரிக்கும். உங்கள் மனைவியின் மீது தவறு இருந்தாலும், பொறுமையுடன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நாசூக்காக சுட்டிக்காட்டுங்கள்."

1.மற்றவர்கள் உன்னை மதிக்காவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் உனக்கு" என்று நீங்கள் கூறும் வார்த்தை ஒன்றே உங்கள் மனதை ஆற்றும், நிச்சயம் நீங்கள் கூறும் கருத்துக்களை அப்போது கூறினால் புரிந்துக் கொள்வார் உங்கள் மனைவி.

2.மற்றவர்களின் முன், முக்கியமாக உங்கள் தாயின் முன் உங்கள் மனைவியை குறை கூறுவதோ, கோபப்படுவதோ கூடவே கூடாது. இவ்விதமான உங்கள் நடக்கை உங்கள் மனைவியின் உணர்வுகளை நொறுக்குவதோடு, அதன் விளைவாக தன் ஆற்றாமையை உங்கள் தாயிடம் கோபமாக, மரியாதை குறைவாக வெளிப்படுத்த வைக்கும்.

3. மனைவியின் பெற்றோர், உறவினர்களை அவமதிப்புடன் நடத்தாதிருங்கள். இதுவும் உங்கள் மனைவியை பழிவாங்கும் உணர்வுடன் உங்கள் தாய் மற்றும் உங்கள் உடன் பிறந்தோரை அவமதிக்க செய்யும்.

4.உங்கள் மனைவியிடம் உங்கள் தாயின் விருப்பு, வெறுப்புகளையும், உங்கள் திருமணத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட ஆர்வத்தையும், சிரத்தையையும், பொறுப்புகளையும் எடுத்துக் கூறி உணர வையுங்கள்.

5.சிறு வயதில் நீங்கள் செய்த குறும்புகளுக்காகவும், தவறுகளுக்காகவும் உங்களை கண்டிக்கும் வகையில் உங்கள் அம்மா திட்டியது, அடித்தது எல்லாம் உளறிக்கொட்டி உங்கள் மனைவிக்கு உங்கள் தாயின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடாதிருங்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது,

அம்மாவிற்கு நான்கு டிப்ஸ் தேவைப்பட்டால், மனைவிக்கு ஐந்து டிப்ஸ் தேவைப்படும் என்பது தெளிவாகிறது.

ஒரு முக்கியமான விஷயம், மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளவர்கள் யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

இலங்கைத்தமிழ் கிரிக்கெட் வீரர் முரளிக்கு வாழ்த்துக்கள்!

இலங்கைத்தமிழ் கிரிக்கெட் வீரர் முரளிக்கு வாழ்த்துக்கள்!



டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 709வது விக்கெட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ண் இனது 708 என்ற இலக்கை எட்டியதன் மூலம் புதிய தோர் உலக சாதனையை இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் தனது சொந்த ஊரான கண்டியில் நேற்று முறியடித்தார்.




இங்கிலாந்துக்கும், இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தச்சாதனையைப்படைத்தார்.இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட்டை வீழ்த்தியதன் மூலம் 709 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இந்தச்சாதனையைப்படைத்தார். முரளியின் உலக சாதனையைத் தொடர்ந்து கண்டி மைதானத்தில் உற்சாகம் கரைபுரண்டோடியது. இலங்கை வீரர்கள், முரளியை கட்டிப் பிடித்தும், தட்டிக் கொடுத்தும் வாழ்த்தினர். ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். இலங்கை முழுவதும் முரளியின் உலக சாதனையை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர்.



சாதனைக்கு பிறகு கருத்துவெளியிட்டுள்ள முரளீதரன் "சொந்த மண்ணில் தனது பெற்றோர்கள், மனைவி மற்றும் உறவினர்கள், கல்லூரி நண்பர்கள்சூழ்ந்திருக்க இந்தச் சாதனையை படைத்ததிருப்பதால் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். "முரளியின் சாதனைப் பட்டியல்* டெஸ்ட் போட்டிகள் - 116 விக்கெட்டுகள் - 709* 10 விக்கெட் வீழ்ச்சி - 20 முறை* 5 விக்கெட் வீழ்ச்சி - 61 முறை. முத்தையா முரளிதரனின் உலக்ச் சாதனையைப் பாராட்டி அரசு அவரது உருவம் பதித்த வட்டவடிவ தபால் தலை ஒன்றினை வெளியிட்டு கௌரவித்துள்ளது.

இலங்கை அரசின் அதிபர், பிரதமர் ,எதிர்க்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராட்டுக்களை முரளீதரனுக்கு தெரிவித்துள்ளனர். இது பற்றி கருத்துத்தெரிவித்த ஷேன் வார்ண் " தனது சாதனையை முறியடித்துள்ள முரளீதரன் ஆயிரம் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய திறமை வாய்ந்தவர்" என்று ஷேன் வார்ண் தெரிவித்துள்ளார். "அவ்வாறு அவர் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தினால் அந்தச் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்."முரளிதரன் சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் ராமமூர்த்தியின் மகள் மதி மலரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மதி மலர் முரளியின் சாதனையை நேரில் பார்த்து மகிழ்ந்தார்.

இந்த முரளியின் சாதனை கண்டு மகிழ்வுறும் நலம் விரும்பி!

இந்த வாழ்த்துக்கடலில் நானும் ஒரு ஆறாக கலக்க விரும்பி!!
அன்புடன் ஜோதிபாரதி.

சுவாரஸ்யமான சம்பவங்கள்!



காண்டீனில்!

காலை சிற்றுண்டிக்கு எங்கள் நிறுவனத்தின் காண்டீனில் எல்லோரும் வரிசையில்(Q) நின்று கொண்டு இருந்தோம். எனக்கு முன்னால் நின்றவர் ஒரு இந்தியர், அவர் அந்த காண்டீன் பெண்மனியிடம்(சீனர்) ரொட்டி பரோட்டாவை காண்பித்து TWO என்று ஆர்டர் செய்தார். அந்த பெண்மனியும் இரண்டு ரொட்டி பரோட்டாவை ஒரு பிளேட்டில் வைத்து விட்டு, ஒரு கிண்ணத்தில் அதற்கான குழம்பை எடுக்க முனைந்தார். உடனே அந்த இந்திய ஆடவர் POUR என்று சொன்னார். உடனே அந்த சீன பெண்மனிக்கு வந்தது பாருங்கள் கோபம், கோபத்துடன் அந்த இந்தியரை நோக்கி " Just now you ask me Two, Now you ask me Four-a?, Alamak You!" என்று சொல்ல பக்கத்தில் இருந்த எனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.(அவர் சொன்ன POUR என்றால் குழம்பை பரோட்டா மேலேயே ஊத்துங்கன்னு அர்த்தம்) அந்த இந்திய ஆடவரோ சிரிக்கவும் முடியாமல், அந்த சீனருக்கு புரியவைக்கவும் முடியாமல் திணறினார். அப்படியே என்னை பார்த்து புன்முறுவல் பூத்த அந்த இந்தியரை பார்த்து "அப்படிதான்" என்பது போல் தலையை ஆட்டினேன்.



பேருந்து நிறுத்தத்தில்!

வேலை முடிந்ததும் கம்பெனியில், கம்பெனி பேருந்துக்காக காத்திருப்பது வழக்கம். நான் இப்போதெல்லாம் காத்திருப்பதில்லை. பொது போக்குவரத்து பேருந்தில் ஏறி வீட்டுக்கு வந்து விடுகிறேன். ஒரு நாள் என்னுடைய சக ஊழியர் என்னிடம், "Why are you taking Public Transport? Are You RICH? கேட்டார். அதற்கு நான் "I AM NOT RICH. But, I WANT TO REACH(HOME ON TIME)." என்று சொன்னேன், கொல்லென்று சிரித்துவிட்டார்.

அன்புடன் ஜோதிபாரதி

வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

ஆமோதித்தல் - உடன்படல்,வழிமொழிதல்,மகிழ்தல்

ஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு

ஆயத்தம்(இந்தி) - முயற்சி,எத்தனம்,முன்னேற்பாடு

ஆயா(போர்ச்சுக்கீஸ்) - செவலித்தாய்,கைத்தாய்

ஆயாசம்,ஆயாஸம் - களைப்பு,இளைப்பு,சோர்வு,அயர்வு,மயக்கம்

ஆயுசு,ஆயுள் - வாழ்நாள்,ஆண்டு

ஆயுதம் - கருவு,படைக்கலம்,படை,வாள்

ஆரணியம்,ஆரண்ணியம் - காடு

ஆரம்,ஹாரம் - பூமாலை,தொடையல்

ஆரம்பம் - தொடக்கம்

ஆரம்பித்தல் - தொடங்கல்

ஆராதனம் - வணக்கம்,மகிழ்வித்தல்

ஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்

ஆரோக்கியம் - நலம்,நோயின்மை

ஆரோபணம்- நாட்டுதல்,ஏற்றுதல்

ஆரோபித்தல் - ஏற்றுதல்

ஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்

ஆர்மோனியம் - இசைக்கருவி

ஆர்வம் - அன்பு,விருப்பம்

ஆலகண்டண் - சிவன்,நஞ்சுமிடற்றன்,கறைமிடற்றன்

ஆலகம்- நெல்லிமரம்

ஆலம் - நஞ்சு

ஆலயம் - கோயில்

ஆலாபம்,ஆலாபனம் - அலப்பு,பேச்சு,உரையாடல்

ஆலோசனை - சூழ்தல்,சூழ்ச்சி,ஓர்வு,எண்ணம்,ஆராய்ச்சி

ஆவசியம் - கட்டாயம்,முதன்மை,இன்றியமையாமை

ஆவத்து,ஆபத்து - இக்கெட்டு,இடர்,பொல்லாங்கு

ஆவர்த்தி,ஆவருத்தம்,ஆவிருத்தி - தடவை,வரிசை,சுற்று,வழக்கம்

ஆவாகனம் - அழைத்தல்,உட்புகல்

ஆனந்தபரவசம் - இன்பக்களிப்பு,பேரின்பக்களிப்பு

ஆனந்தம் - இன்பம்,பேரின்பம்

ஆன்மா - உயிர்

இகம் - இவ்வுலகம்,இவ்விடம்,இப்பிறப்பு

இங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்

இச்சகம் - முகமன்

இச்சை - விருப்பம்,அவா,விழைவு,வேட்கை

இடபம்,ரிஷபம் - எருது,காளை,ஏறு,விடை

இட்டசித்தி - விருப்பப்பேறு

இதம்,ஹிதம் - இனிமை,நன்மை,அன்பு,அறம்

இதயம்,இதையம்,ஹிருதயம் - நெஞ்சம்,உள்ளம்

இதரம் - வேறு,இயல்,அழிவு,பகைமை

இதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை

இந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்

இந்து - நிலா,திங்கள்,அம்புலி

இமாலயம்,ஹிமாலயம் - பனிமலை

இரகசியம் - மறைபொருள்,மறை,அற்றம்

இராசாபாசம் - அருவருப்பு,ஒழுங்கின்மை

இரசாயனம் - பொருளியைபு

இரட்சகம் - பாதுகாப்பு,மீட்பு

இரட்சை - காப்பு

இரணம்,ரணம் - புண்

இரதம்,ரதம் - தேர்

இரத்தம் - குருதி,செந்நீர்

இரத்தினம்,ரத்தினம் - மாமணி,செம்மணி

இரம்பம்,ரம்பம் - ஈர்வாள்

இராகம்,ராகம் - இசை,பண்,அவா,விருப்பு

இராகு - கருங்கோள்

இராக்கதர் - அரக்கர்

இராசசூயம் - அரசர் வேள்வி

இராசா - அரையன்,மன்னன்,அரசன்

இராச்சியம் - நாடு,அரசியல்

இராத்திரி - இரவு,கங்குல்

இருஷி,இருடி - முனிவன்,தவசி,துறவி

இதய கமலம் - நெஞ்சத்தாமரை

இருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு

இரேகை - வரி,எழுத்து,கையிறை,நிறை,தொடர்

இலகிரி,லகிரி,லாகிரி - வெறி,மயக்கம்

இலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்

இலங்கணம் - பட்டினி

இலஞ்சம் - கைக்கூலி,கையூட்டு,கையுறை

இலட்சணம்,லட்சணம் - அழகு,பார்வை

இலயித்தல் - ஒடுங்குதல்,சேர்ந்தொன்றித்தல்

இலெளகீகம்,இலவுகீகம் - உலகியல்,உலகப்போக்கு

இலாஞ்சனம்,இலாஞ்சனை - புகழ்,அடியாளம்,கறை

இலாபம்,லாபம் - ஊதியம்,மிச்சம்,பேறு

இலீலை,லீலை - விளையாட்டு

யுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு

உக்கிராணம் -களஞ்சியம்,சரக்கறை

உஷ்ணம் - வெப்பம்,சூடு

உசிதம் - உயர்வு,சிறப்பு,மேன்மை,தகுதி,ஒழுங்கு

உசிதன் - தக்கோன்

உச்சம் - உயர்ச்சி,சிறப்பு

உச்சரித்தல் - சொல்லுதல்,ஒலித்தல்,ஓதல்

உச்சரிப்பு - எழுத்தோசை

உச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்

உச்சி - மேடு,முகடு

உச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்

உதயன் - பகலோன்

உதாரணம்,திருட்டாந்தம் - எடுத்துக்காட்டு,சான்று

உத்தமம் - உண்மை,மேன்மை

உத்தரியம்,உத்தரீயம் - மேலாடை

உத்தரவு - கட்டளை

உத்தி,யுத்தி - அறிவு,இணக்கம்,இசைவு,சூழ்ச்சி,சொல்

உத்தேசம்,உத்தேகம் - கருத்து,மதிப்பு,ஏறக்குறைய

உபகரணம் - கொடுத்தல்,உதபிபொருள்கள்,கருவி,துணைக்காரணம்

உபதேசம் - அருண்மொழி,அறிவுரை

உபயம் - உதவி,நன்கொடை,இரண்டு

உபாசநம்,உபாசநை,உபாசனை - வழிபாடு,வணக்கம்

உபாதி,உபாதை - நோய்,துன்பம்,வருத்தம்

உபாத்தியாயன் - கணக்காயன்,ஆசிரியன்,கற்பிப்போன்

உபாயம் - சூழ்ச்சி,நொய்மை,எளிது,சிறிது

உயுக்கம்,உயுத்தம்,யுத்தம் - போர்,தகுதி

உருசி,ருசி - சுவை

உருத்திராக்கம் - சிவமணி,சுக்குமணி

உரூபம்,ரூபம் - உருவம்,வடிவம்

உரொக்கம்,ரொக்கம் - கைப்பணம்,இருப்பு,கையிருப்பு

உரோமம்,ரோமம் - மயிர்,முடி,குஞ்சி

உல்லாசம் - மகிழ்ச்சி,விளையாட்டு,களிப்பு,உள்ளக்களிப்பு

உவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்

ஊகம் - கருதல்,ஓர்தல்,கருத்து,நினைவு

ஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு

எசமானன்,எஜமான் - தலைவன்,முதல்வன்,முதலாளி

எந்திரம் - பொறி

எமன் - கூற்றுவன்,மறலி

ஏகதேசம் - ஒருபால்,ஒருபுடை,சிறுபான்மை

ஏகம் - ஒன்று,தனிமை

ஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு

ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்

ஏடணை,ஏஷணை - விருப்பம்

ஐது,ஹேது - காரணம்

ஏக்கம்,ஐக்கியம் - ஒற்றுமை

ஐஸ்வர்யம்,ஐச்வரியம் - செல்வம்,பொருள்,திரு

ஐதீகம்,ஐதிகம் - உலகுரை

ஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்

ஓமம்,ஹோமம் - வேள்வி

ஒளடதம்,ஒளஷதம்- மருந்து

களோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்

கடகம் - கைவளை,வளையம்

கடம் - கடம்,யானைக்கதுப்பு

கடாட்சித்தல் - அருளல்

கடாரம் - கொப்பரை,தேங்காய்

கடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி

கடிகை - நாழிகை,தாழ்க்கோல்

கடினசித்தம் - வன்னெஞ்சம்

கடினம் - வன்மை,கடுமை,வருத்தம்,கொடுமை

கடூரம்,கொடூரம் - கொடுமை

கட்டம்,கஷ்டம் - துன்பம்,வருத்தம்

கணம்,ஹணம் - குழாம்,கூட்டம்,தொகுதி,நொடிப்பொழுது

கணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்

கணிகை - பொதுமகள்

கணிசம் - அளவு,மேம்பாடு

கணிதம் - கணக்கு

கண்டம் - நிலப்பிரிவு,துண்டு,கட்டி,மிடறு,கழுத்து

கண்திட்டி,கண்திருஷ்டி - கண்ணேறு

கதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது

கதலி - வாழை

கதி - நடை,செலவு,வழி,புகலிடம்,பற்றுக்கோடு,நிலை

கனகம்,கநகம் - பொன்

கனவான்,கநவான் - பெரியோன்,பெருமையாளன்,பெருந்தகை

கனிஷ்டை,கநிஷ்டை - பின்னோள்,தங்கை

கன்னிகை,கந்நிகை - மணமாகாதவள்,இளம்பெண்

கந்மம்,கருமம் - தொழில்,வினை

கபடம்,கவடம்,கபடு - கரவு,படிறு,வஞ்சகம்,மோசம்,சூது,ஒளிப்பு

கபாலம் - தலையோடு,மண்டையோடு

கபோதி - குருடன்

கப்பம் - இறை

கமண்டலம் - நீர்க்குடுவை

கமலம் - தாமரை,நீர்

கம்பீரம் - உயர்தோற்றம்,பெருமை,ஆழம்,செருக்கு

கயம்,ஹயம் - குளம்,ஆழம்,யானை

கரகம் - வட்டில்,நீர்க்குடுவை

கரகோசம்,கரகோஷம் - கைதட்டுதல்

கரணம் - கருவி,ஐம்பொறி

கரம் - கை

கருச் சித்தல் - முழங்கல்,இரைதல்

கருணை - அருள்,இரக்கம்

கர்த்தா,கருத்தா - தலைவன்,வினைமுதல்,ஆக்கியோன்,நூலாசிரியன்,முதல்வன்,கடவுள்

கர்ப்பவதி - சூலி

கர்ப்பாசயம் - கருப்பை

கர்வம் - செருக்கு,இறுமாப்பு

கலாபம்,கலபம் - மயில்,மயிற்றோகை

கலி - வறுமை,துன்பம்

கலியாணம் - மனம்,மன்றல்,பொன்,மகிழ்ச்சி

கவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்

கவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்

கவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்

கவி - செய்யுள்,புலவன்,பாட்டு

கவுளி,கெளளி - பல்லி

களேபரம் - குழப்பம்,உடல்,பிணம்

கற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து

கனம் - சுமை,பளு,பளுவு

காசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்

கசாயம்,கஷாயம் - காவி

காஞ்சிரம் - எட்டி மரம்

காட்டம்,காஷ்டம் - விறகு,வெகுளி

காதகன் - கொலையாளி

காயசித்தி - நீடுவாழ்ப் பேறு

காயம் - உடல்,யாக்கை,வான்

காரிய கர்த்தா - வினைமுதல்வன்

காரியதரிசி - அமைச்சன்,செயலாளன்

கலாட்சேபம் - பொழுதுபோக்கல்,நாட்கழித்தல்,வாழ்க்கை

கால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு

கிஸ்தி - திறை,வரி

கிரகணம்,கிராணம் - பற்றுதல்,பிடித்தல்

கிரகஸ்தம் - இல்லற நிலை

கிரகம் - வீடு,கோள்,பற்றுதல்,பிடிப்பு

கிரணம் - ஒளி,கதிர்

கிரந்தம் - நூல்,எழுத்து

கிரமம் - ஒழுங்கு,முறைமை

கிரயம் - விலை

கிராதன் - குறவன்,வேட்டுவன்

கிரி - மலை,பன்றி

கிரிகை - தொழில்,செயல்,வினை,சடங்கு

கிரிமி,கிருமி - உயிரி,பூச்சி,புழு

கிரீடம் - முடி

கிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை

கிலம் - கழிவு,அழிவு,சிறுமை

கிலேசம் - அச்சம்,கவலை,துன்பம்

கீதம் - இசை,பாட்டு,பாடல்,இசைப்பாட்டு

கீர்த்தனம்,கீர்த்தனை - புகழ்ச்சி,புகழ்ப்பா

கீலகம் - ஆணி,பொருத்து

குஞ்சரம் - யானை

குஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்

குணஷ்டை - தொல்லை,துன்பம்

குதர்க்கம் - அழிவழக்கு

குதூகலம்,குதுகலம் - பெருங்களிப்பு,பெருமகிழ்வு

குபேரன் - பெருஞ்செல்வன்,செல்வக்கடவுள்

குமரி,குமாரி - நங்கை,மணமாகாப்பெண்,புதல்வி,மகள்

கும்பம் - குடம்

குருகடாட்சம் - ஆசிரியனருட்பார்வை

குரோதம் - உட்பகை

குலாலன் - குயவன்

குலிசம் - வேற்படை

குன்மம் - சூலை,வயிற்று வலி

கேதம் - துன்பம்,இடர்,குற்றம்

கேவலம் - சிறுமை,தனிமை

கோகிலம் - குயில்

கோடம்,கோஷம்,கோஷ்டம் - முழக்கம்,பேரோசை

கோஷ்டி - கூட்டம்

கோடி - நூறு நூறாயிரம்

கோதண்டம் - வில்

கோளகை,கோளம் - உருண்டை,வட்டம்

கெளரவம் - மேன்மை,பெருமை

சக - கூட,உடன்

சகசம்,ஸகஸம் - இயற்கை,ஒற்றுமை

சகஸ்ரநாமம் - ஆயிரந்திருமொழி,ஆயிரந்திருப்பெயர்

சகமார்க்கம் - தோழமை நெறி

சகலம் - எல்லாம்

சகவாசம் - கூடவிருத்தல்,உடனுரைதல்,பழக்கம்,சேர்க்கை,நட்பு

சகா - தோழன்,துணை

சகாப்தம் - ஆண்டு,நூறாண்டு

சகாயம் - நயம்,நன்மை,மலிவு,பயன்,உதவி,துணை

சகி,சகீ - தோழி

சகிதம் - உடன்

சகுணம் - குணத்தோடு கூடியது

சகுந்தம் - கழுகு,பறவை

சகுனம் - குறி

சகோதரம் - உடன்பிறப்பு

சகோதரி - உடன்பிறந்தாள்

சக்கரம் - உருளை,வட்டம்

சக்தி - ஆற்றல்,வல்லமை,வலி

சங்கடம்,சங்கட்டம் - இக்கெட்டு,நெருக்கடி,இடர்,கண்மூடுதல்

சங்கிதை - தொகுதி,வரலாறு

சடுதி,சடிதி - விரைவு

சஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு

சண்டப்பிரசண்டம் - மிகு விரைவு

சண்டமாருதம் - பெருங்காற்று,கடியகாற்று,புயற்காற்று

சண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு

சண்டாளர் - தீவினையாளர்,இழிஞர்

சண்டித்தனம் - முருட்டுத்தன்மை,முரட்டுத்தன்மை

சதகோடி - நூறு கோடி

சதசு - அவை

சதம் - நூறு நிலை

சதானந்தம் - இடையறா வின்பம்

சதி - இறைவி,அழிவு,வஞ்சனை,சூழ்ச்சி

சந்தகம் - எப்பொழுதும்

சந்தானம் - வழி,வழித்தொடர்பு

சந்தித்தல் - எதிர்படுதல்,கூடுதல்

சந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்

சந்திரன் - பிறை,கலையோன்,இரவோன்,அலவன்,அல்லோன்

சந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து

சந்துட்டம்,சந்துஷ்டி,சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்தேகம் - ஐயம்,ஐயுறவு

சந்தோஷம் - மகிழ்ச்சி,உவகை,களிப்பு

சன்னதி,சந்நதி,சந்நிதானம் - திருமுன்

சந்நியாசம் - துறவு,துறவறம்

சபதம் - ஆணை,உறுதிமொழி,வஞ்சினம்

சபம்,ஜெபம் - உருவேற்றல்

சபலம் - நிறைவேறல்,வெற்றி,நடுக்கம்,ஏக்கம்,இச்சை,அவா

சபா,சபை - அவை,மன்றம்,கழகம்,அரங்கம்

சபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்

சமஷ்டி - தொகுதி,எல்லாம்

சமதை - ஒப்பு

சமர்த்தன்,சமத்தன் - வல்லான்,வல்லவன்,திறமையாளன்

சமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்

சமம் - இணை,ஈடு,மட்டம்,போர்,நடு,ஓர்மை

சமரச தத்துவம் - பொதுநிலையுண்மை

சமரசம் - பொது,வேறுபாடின்மை,ஒற்றுமை

சமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்

சமாதானம் - அமைதி,இணக்கம்,தணிவு,உடன்பாடு,தக்கவிடை

சமாதி - அமைதி,பிணக்குழி,பேசாதிருத்தல்,இறப்பு,மரித்தல்

சமாப்தம்,சமாப்தி - முற்றுப்பெற்றது

சமாராதனை - உளநிறைவு

சமி,ஷமி - பொறு

சமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி

சமீபம் - அருகு,அணமை,மருங்கு

சமீன்தார்,ஜமீந்தார் - நிலக்காரன்,பெருநிலக்கிழார்

சமுதாயம் - குமுகம்,கூட்டம்

சமுத்திரம் - கடல்

சமை,ஷமை - பொறுமை

சம்சாரம்,சம்ஸாரம் - குடும்பம்,இல்லாள்,இல்லத்தரசி

சம்பத்து - செல்வம்,பொருள்

சம்பந்தம -உறவு,பற்று,இயைபு,சார்பு,தொடர்பு,பொருத்தம்

சம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை

சம்பு ரேட்சணம் - தெளித்தல்

சம்பூரணம் - நிறைவு

சம்மதம் - உடன்பாடு,ஒப்புமை,இயைபு

சம்ரஷணை - பாதுகாப்பு

சயம்,ஜெயம் - வெற்றி

சரணம்,சரண் -அடைக்கலம்,வணக்கம்,கால்,திருவடி

சரணாகதி - புகலடைதல்,அடைக்கலம்

சராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்

சரிதம்,சரிதை,சரித்திரம் - வரலாறு

சரீரம் - உடல்,யாக்கை,மெய்

சருமம்,சர்மம் - தோல்

சர்ப்பம் - பாம்பு

சர்வகலாசாலை -

பல்கழைக் கழகம்

சலதளம்- அரசமரம்

சலதாரை - நீர்க்கால்,நீரோட்டம்,மதகு

சலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை

சல்லாபம் - உரையாடல்

சவம் - பிணம்

சவுகரியம்,செளக்கியம்,செளகரியம் -நலம்

சவுந்தரியம்,செளந்தரியம்,சவுந்தரம் - அழகு

செளபாக்கியம்,சவுபாக்கியம் - செல்வம்

சற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை

சற்குணம் - நல்லியல்பு

சனனம்,ஜனனம்,சனிப்பு,சன்மம் - பிறப்பு

சாகசம் - ஆற்றல்,துணிவு,நெருக்கிடை

சாகரம் - கடல்

சாகுபடி - பயிர் செய்தல்

சாகை,ஜாகை(உருது) - தங்குமிடம்

சாக்கிரதை,ஜாக்கிரதை - விழிப்பு,உன்னிப்பு,எச்சரிக்கை